அடடே, ஆச்சர்யக்குறி!: விரைவில் வெளியாகவுள்ள ‘என்ஜிகே’ பட டீசர்!
கடந்த தீபாவளிக்கு வெளிவரவேண்டிய படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான என்ஜிகே படத்தின்...
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் - என்ஜிகே. இப்படத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்கள்.
கடந்த தீபாவளிக்கு வெளிவரவேண்டிய படம் இது. ஆனால் பல்வேறு காரணங்களால் தாமதமான என்ஜிகே படத்தின் வெளியீடு விரைவில் நிகழவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக படத்தின் டீசர் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிலவாரங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்ததையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்ஜிகே படத்தின் வெளியீடு மட்டுமல்லாமல் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியீடு போன்றவையும் தாமதமாவது குறித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் எழுதி வருகிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கடந்த டிசம்பர் மாதம் ட்விட்டரில், பாடல்கள் அற்புதமாக உள்ளன. உங்களுக்கு அவற்றை வழங்க ஆவலாக உள்ளேன், ஆனால் எப்போது என்று கேட்கவேண்டாம் என எழுதினார். இன்னொரு ட்வீட்டில், என்ஜிகே படம் குறித்து நீங்கள் ஆவலாக உள்ளீர்கள் எனத் தெரியும். ஆனால் படம் வெளிவரும்வரை நம் ஆர்வத்தைக் கட்டுப்படுத்துவோம். படம் குறித்த தகவல்களை கசிய விடவேண்டாம் என்று கூறியிருந்தார். இந்நிலையில் டீசர் தேதி அறிவிப்பு என்ஜிகே படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.