முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் ஷங்கர்
மகளின் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தியது மறக்க முடியாத ஆசிர்வாதம்.
மகளின் திருமணத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய முதல்வர் ஸ்டாலினுக்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னணி இயக்குநராக உள்ளார் ஷங்கர். ராம் சரண் படம், அந்நியன் ஹிந்தி ரீமேக், இந்தியன் 2 எனத் தற்போது மூன்று படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஷங்கரின் மூத்த மகள் மருத்துவர் ஐஸ்வர்யாவுக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகனும் புதுச்சேரி கிரிக்கெட் அணி கேப்டனுமான ரோஹித்துக்கும் மாமல்லபுரத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.
இத்திருமணத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்ரமணியன், திமுக இளைஞரணிச் செயலாளரும், எம்எல்ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இந்நிலையில் திருமணத்துக்கு வருகை தந்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து ஷங்கர் ட்வீட் செய்துள்ளார். அவர் கூறியதாவது:
மகளின் திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்தியது மறக்க முடியாத ஆசிர்வாதம். இதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மணமக்களை வாழ்த்திய மா. சுப்ரமணியன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கும் நன்றி என்றார்.