செய்திகள்

'தளபதி படப்பிடிப்பின்போது ...' நடிகர் ரஜினி பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

DIN

பொன்னியின் செல்வன் இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தளபதி படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு டிரைலரை வெளியிட்டனர்.

அதன்பின் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘இந்த விழாவின் கதாநாயகர்கள் அமரர் கல்கி, தயாரிப்பாளர் சுபாஸ்கரன், மணிரத்னம்தான். 70 ஆண்டுகளுக்கு முன் ஐந்தரை ஆண்டுகளாக கல்கியால் தொடராக எழுதப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக எடுக்க பலர் முயற்சி செய்தனர். ஆனால், அந்த வாய்ப்பு யாருக்கும் அமையவில்லை. சுபாஸ்கரன் தயாரித்து வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். மணிரத்னம் ஒரு அசாத்ய திறமைசாலி. பாலிவுட்டில் மணியைக் கண்டாலே பல ஜாம்பவான்கள் எழுந்து நிற்பார்கள். தளபதி முதல் நாள் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. நானும் மணிரத்னமும் இணையும் முதல்படம். நான் அணிய வேண்டிய ஆடையைக் காட்டினார்கள். தொலதொலவென பேண்ட், செருப்பு. ஆனால், நான் நல்ல ஆடையையும் ஷூவும் அணிந்துகொண்டு நேராக படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன். மணி என்னைப் பார்த்து உங்கள் காஸ்டியூம் எங்கே? என்றார். நான் இதுதான் காஸ்டியூம் என்றேன். ’சரி’ எனக் காத்திருக்கக் கூறிவிட்டு அவர் குழுவினருடன் பேசிக்கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் எனக்கான காட்சிகள் துவங்காததால் அப்படத்தின் நாயகியான ஷோபனாவிடம் சென்று என்ன நடக்கிறது? என விசாரித்தேன். அவர் சிறிது நேரம் கழித்துவந்து படத்தில் உங்களுக்கு பதிலாக கமல்ஹாசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்றார்’ எனக்கூறியதும் அரங்கிலிருந்தவர்கள் சிரிக்கத் துவங்கினர்.

மேலும், ‘பொதுவாக என்னுடைய படங்களில் ‘தூக்கு..அடி’ என்கிற வகையிலேயே கதை இருக்கும். ஆனால், மணிரத்னம் என்னிடம் நிறைய நடிப்பை எதிர்பார்த்தார். என்னிடமிருந்த சில உணர்ச்சிகள் அவருக்கு போதவில்லை. இன்னும் உணர்வுப்பூர்வமாக நடிக்கச் சொன்னார். நான் கமல்ஹாசனை அழைத்து ‘ஒவ்வொரு ஷாட்டும் 10 டேக் போகுது.. எப்படி நீங்க நடிச்சீங்க? என்றதும் அவர் ஒரு யோசனை சொன்னார். அதாவது, இனி மணிரத்னம் நடிக்கச் சொல்லும்போது எப்படி என அவரையே நடித்துக்காட்டச் சொல்லி அதைப்போலவே நீங்கள் செய்துவிடுங்கள் என்றார். அப்படித்தான் தளபதியில் நடித்து முடித்தேன்’ என நகைச்சுவையாக பேசி பலரையும் சிரிக்க வைத்தார்.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், சரத்குமார் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வருகிற செப்.30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருப்பு நிலா- ரச்சிதா மகாலட்சுமி

விசாரணைக் கைதி மரணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

2027-க்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா ஜொலிக்கும்: ஜெ.பி.நட்டா

அழகென்றால்....ஐஸ்வர்யா மேனன்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT