நடிகர் சிவராஜ்குமார் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ளார்.
கன்னட திரையுலகின் நட்சத்திர நடிகரான சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தின் மூலம் தமிழக ரசிகர்களிடமும் பெரிதாகப் பிரபலமானார். பின், நேரடி தமிழ்ப் படமொன்றில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதற்கிடையே, அவர் நடித்த கோஸ்ட், பைரதி ரணகல் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன. தொடர்ந்து, தன் சிறுநீர் பையில் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு அதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து நலமானார்.
தற்போது, 45 என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் டிச. 25 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் உபேந்திரா, ராஜ் பி ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில், இப்படத்திற்கான தமிழ் புரமோஷனுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சிவராஜ்குமாரிடம், “உங்கள் தந்தை நடிகர் ராஜ்குமார் அரசியலுக்கு வந்தார். இப்போது, நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வந்துவிட்டார். நீங்கள் ஏன் வரவில்லை?” எனக் கேட்டக்கப்பட்டது.
இதற்கு சிவராஜ்குமார், “அரசியலுக்கு வந்துதான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றில்லை. நல்ல விஷயங்களை எங்கிருந்தாலும் பண்ணலாம். உண்மையில், அரசியலில் இல்லாமல் இருந்தால் நிறைய மக்களுக்கு உதவலாம். ஏதாவது கட்சி சார்பாக இருந்தால் குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமே செய்ய வேண்டியிருக்கும். நல்லது செய்ய அதிகாரம் தேவை இல்லை என நினைக்கிறேன்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.