சிறப்புக் கட்டுரைகள்

சர்ச்சைக்குரிய அமைச்சர் சாரங்கி... பாராட்டு எளிமைக்கும் சேவைக்கும் மட்டுமே தவிர மதவெறித் தூண்டலுக்கு அல்ல!

RKV


‘மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்வதென்பது, செய்த உதவிக்கு பிரதிபலனாக பெண்களை தவறான உறவுக்கு அழைப்பதற்கு ஒப்பானது!’

'Religious conversion is like Sex in exchange for favours' - Minister Pratap Sarangi

மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்ற பின்னர், சமீபத்தில் ‘தி ப்ரிண்ட்’ இணைய ஊடகத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில்  சாரங்கி வெளியிட்ட கருத்து இது. இதை விமர்சிக்கும் தகுதி மக்களுக்கு இருக்கிறதா என்றால் ஒரே சமயத்தில் ஆம் என்றும் இல்லையென்றும் சொல்லவேண்டியதாய் இருக்கிறது. ஏனெனில், பல நேரங்களில் மக்களில் பலரும் கூட மத வெறியர்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்கள் தன்னியல்பில் அப்படி இருக்கிறார்களோ அல்லது ஆக்கப்படுகிறார்களோ அது இரண்டாம் பட்சம். ஆனால், சாரங்கியின் இந்த வார்த்தைகள் போதுமெனத் தோன்றுகிறது அப்படிப்பட்ட மதவெறியர்களை மேலும் ஊக்குவிக்க.

ஏழை எளிய, பழங்குடி இன மக்களை, அவர்களுக்குச் செய்யும் உதவிகளைக் காரணம் காட்டி மதமாற்றம் செய்ய முயல்வது முற்றிலும் தவறு, ஆனால், அந்தத் தவறைத் தானே கிறிஸ்தவ மிஷினரிகள் ஆரம்பம் முதலே செய்து வருகின்றன. அதை சட்டம் போட்டுத் தடுக்க முடிந்தால் அரசுகள் அல்லவோ தடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு மக்களிடையே உணர்ச்சிகளைத் தூண்டுவது போல தலைவர்கள் என்று கருதப்படக் கூடியவர்களும், பொறுப்பில் இருப்பவர்களும் பேசினால் அது எதிர்விளைவுகளைத் தானே உண்டாக்கக்கூடும்.

‘தி ப்ரிண்ட்’  நேர்காணலில்  சாரங்கியிடம்,   ஒதிஷாவில் எரித்துக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன் கொலை குறித்தும் அதில் சாரங்கியின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த சாரங்கி;

வாத்வா கமிஷன் அறிக்கை, ஒதிஷா உயர்நீதிமன்றம்,  அன்றைய இந்தியக்குடியரசுத் தலைவர் அனைவரும் உறுதிப்படுத்தி விட்டார்கள் அந்தக் கொலை வழக்கில் பஜ்ரங்தள் அமைப்பிற்கு தொடர்பு இல்லை என. அப்படி இருக்கும் போது எதிர்கட்சிகளின் கற்பனைகளுக்கு எல்லாம் நான் பதில் அளிக்க விரும்பவில்லை’  எனத் தெரிவித்தார்.

அத்துடன், கொலை செய்யப்பட்ட பாதிரியாரின் மனைவி இப்போதும் ஒதிஷாவில் அதே பழங்குடி கிராமத்தில் தான் குடியிருக்கிறார். எனவே அங்கு இப்போதும் தொடர்ந்து மக்கள் மதமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்களா? எனும் கேள்விக்கு பதில் அளிக்கையில் தான் மேற்கண்ட வாசகத்தை பதிவு செய்தார் சாரங்கி.

அதாவது மதமாற்றத் தடைச் சட்டம் 1967 ன் படி, ஒருவரைக் கட்டாயப்படுத்தியோ ஏமாற்றியோ அல்லது சலுகைகள் காட்டியோ மதமாற்றம்செய்வது தண்டனைக்குரிய குற்றம். பாதிரியார் மற்றும் அவரது மகன்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அப்போதைய பஜ்ரங்தள் அமைப்பின் தலைவர் என்ற முறையில் நான் எனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்யத் தவறவில்லை. ஆயினும், இந்த மிஷினரிகள் அப்பாவி மக்களின் ஏழ்மையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மதமாற்றம் செய்வதையும் எந்தக் காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. என்று சொன்ன சாரங்கி அதன் தொடர்ச்சியாகச் சொன்னது தான் மேற்கண்ட வாசகங்கள்.

மேலோட்டமாகப் பார்த்தால் அவரது கருத்து வாஸ்தவமானதாகத் தெரியலாம், ஆனால், மத விவகாரங்களில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளோரை நிச்சயம் இத்தகையை எழுச்சியுரைகள் வெறிச்செயல்களில் ஈடுபடத் தூண்டும் சாத்தியமிருக்கிறது.

1967 ஆம் ஆண்டு மதமாற்றத்தடைச் சட்டம் அன்றைய ஒரிஸாவில் (இன்று அது ஒதிஷா) கொண்டு வரப்பட்ட போது அந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டால் அதற்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆயினும் இந்தச் சட்டமானது அரசியல் சாசனத்தின் 25-வது பிரிவு வழங்கியுள்ள உரிமையை மறுப்பதாக உள்ளது எனக்கூறி இச்சட்டத்தைத் தள்ளுபடி செய்தது ஒதிஷா உயர்நீதிமன்றம்.

மதமாற்றத் தடைச் சட்டத்திற்கான ஆதரவும், எதிர்ப்பும் இவ்விதமாக ஸ்திரத் தன்மை இன்றி மக்களிடையே ஊசலாடிக் கொண்டிருக்கையில்,

மீண்டும் மதமாற்றத் தடைச்சட்டம் பற்றிப் பேசி மக்களிடையே மத ரீதியிலான உணர்வுகளைத் தட்டி எழுப்புவது போன்றதான உணர்வில் முழங்கி வரும் பாஜக அரசின் புதிய மந்திரி சாரங்கியின் வார்த்தைகளில் தெறிக்கும் அனல் புதிதாக எங்கானும் மதக்கலவரத்தை உண்டு பண்ணாமல் இருந்தால் சரி. 

கடந்த வாரம் அரங்கேறிய பாஜக அரசின் மத்திய அமைச்சரவைக் குழு பதவியேற்பு விழாவின் எழுச்சி நாயகனாக ஒட்டுமொத்த இந்தியாவையும் புருவம் உயர்த்திப் பார்க்க வைத்த நபர்களில் ஒருவரே ஒதிஷாவின் சந்திர பிரதாப் சாரங்கி. இவரது எளிமை குறித்து இணைய ஊடகங்களும் சரி, அச்சு ஊடகங்களும் சரி வரிந்து கட்டிக் கொண்டு பாராட்டி எழுதின. தினமணி சார்பிலும் சாரங்கியின் எளிமை குறித்தும், அவரது வெற்றி குறித்தும் பாராட்டிக் கட்டுரை வெளியிட்டோம். அந்தப் பாராட்டுகள் மொத்தமும் சாரங்கியின் எளிமைக்குத் தானே தவிர, அவரது மதவெறியைத் தூண்டும் எழுச்சியுரைகளுக்கு அல்ல!

1999 ஆம் வருடம், ஆஸ்திரேலியப் பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களை காருக்குள் வைத்து எரித்துக் கொன்ற வழக்கில் ஒதிஷாவின் புதிய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கிக்குப் பங்கிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. ஏனெனில், அந்த காலகட்டத்தில் பாஜகவின் துணை அமைப்புகளில் ஒன்றான பஜ்ரங் தள் அமைப்பின் தலைவராக இருந்தவர் சாரங்கி. அந்தப் பயங்கர நிகழ்வின் போது சாரங்கி அவரது நண்பர் தாராசிங் உள்ளிட்டோர் மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி பாதிரியாரும் அவரது மகன்களும் உறங்கிக் கொண்டிருந்த காருக்கு தீ வைத்துக் கொளுத்த காரணமானார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளியென சாரங்கியின் பெயரும் சேர்க்கப்பட்ட போதும் அவரது பங்கேற்பிற்கு சான்றுகள் இல்லையெனக் கூறி சாரங்கி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், தாராசிங்குக்கு 2003 ஆம் ஆண்டில் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது ஒதிஷா உயர்நீதிமன்றம். ஆயினும் இரண்டு ஆண்டுகளின் பின் 2005 ஆம் ஆண்டு, தாராசிங்கின் மரண தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாக்கப்பட்டதுடன், வழக்கில் தொடர்புடைய இதர 11 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையும் கூட போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி விடுதலை செய்யப்பட்டனர். இதற்கான ஆதார புகைப்படங்களையும் சில இணைய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

ஆயினும், கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் குடும்பத்தார் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் பஜ்ரங் தள் அமைப்பிற்கு தொடர்பு இல்லை என வத்வா கமிஷன் அறிக்கை சொல்கிறது. அது வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பஜ்ரங் தளம் என்பது மிகவும் அமைதியான, அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. அந்த அமைப்பிற்கு ஆஸ்திரேலியப் பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்ட பயங்கர சம்பவத்துடன் தொடர்பு இருப்பதற்கு வலுவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அந்த வழக்கில் இருந்து பஜ்ரங்தள் அமைப்பு விடுவிக்கப்படுவதாக வத்வா கமிஷன் அறிக்கை தெரிவிக்கிறது.

குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பும் கூட சாரங்கி, கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு எதிராகப் பேசுவதில் எவ்வித சுணக்கமும் காட்டியதாகத் தெரியவில்லை.

2002 ஆம் ஆண்டு பஜரங் தளம் உள்ளிட்ட சில வலதுசாரி குழுக்கள் ஒதிஷா மாநில சட்டசபை மீது தாக்குதல் நடத்தியது, மக்களிடையே கலவரத்தைத் தூண்டியது, பொது சொத்திற்கு சேதம் விளைவித்தது என பல்வேறு பிரிவுகளில் பிரதாப் சாரங்கி கைது செய்யப்பட்டார். அவர் மீது இது போன்ற ஏழு வழக்குகள் இப்போதும் நிலுவையில் உள்ளன.

எனினும், அதையெல்லாம் விடுத்து, அவரது எளிமையான வாழ்க்கைக்காக இன்று சமூக ஊடகங்களில் அவர் ஹீரோவாக சித்தரிக்கப்படுகிறார்.

காரணம், தனது தொகுதி முழுவதையும் சைக்கிளிலேயே சாரங்கி சுற்றி வருவார். ஒவ்வொரு கிராமமாக சென்று வாக்காளர்களை சந்திப்பார். புவனேஷ்வரில் சட்டமன்றத்துக்கு, பெரும்பாலும் நடந்தோ அல்லது சைக்கிளிலோதான் செல்வார். சாலையோர கடைகளில் அவர் சாப்பிடுவதையும், ரயில்வே நடைமேடைகளில் ரயிலுக்காக அவர் காத்திருப்பதையும் பொதுமக்களில் எவர் வேண்டுமானாலும் எளிதில் காண முடியும்" என்பதாலும் தான் என்கிறார்கள் ஒதிஷா ஊடகத்தினர்.

அமைச்சர்களிடம் மக்கள் எதிர்பார்க்கும் நற்குணங்களில் ஒன்று எளிமை. கடந்த பல ஆண்டுகளாக ஒதிஷா பழங்குடி மக்களின் துயர் துடைத்து. அங்கு படிக்க வகையற்று தவித்துக் கொண்டிருந்த எண்ணற்ற மாணவர்களுக்கு பள்ளிகள் அமைத்துத் தந்து அவர்களது கல்விக்கண் திறந்த வள்ளல் என்ற வகையில் சாரங்கியைப் பாராட்டுவதில் அப்போது எந்தக் கூச்சமும் இருக்கவில்லை. ஆனால், கட்டுரை வெளியான பிறகே, சாரங்கி, குறித்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளியாகத் தொடங்கின. 

தற்போது சாரங்கியை, பரியேறும் பெருமாள் திரைப்படத்து ஜாதி வெறி பிடித்த வயோதிக கதாபாத்திரம் ஒன்றுடன் ஒப்பிட்டு மீம்ஸ்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. கிட்டத்தட்ட உண்மைக்கு மிக நெருக்கத்தில் அமையக் கூடியதான இந்த ஒப்பீட்டை புறம்தள்ளுவது கடினம். ஏனெனில், கட்டுரையின் தொடக்கத்தில் சாரங்கி உதிர்த்த முத்தே அதற்கு ஒரு சோறு ஒரு பதம் சான்று. எனவே, மத வெறியைத் தூண்டும் சக்தி, அது எந்த ரூபத்தில் வெளிப்பட்டாலும், அதை கண்டிப்பதே உண்மையான ஊடக தர்மம். அவ்வகையில், பொது மக்களிடையே சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் விதத்திலான அமைச்சர் சாரங்கியின் கருத்துக்கள், அவை முன்பே அவரிடமிருந்து வெளிப்பட்டவையாகவும் இருக்கலாம், அல்லது இனிமேல் வெளிப்படவிருப்பதாகவும் இருக்கலாம். அது எப்படிப்பட்டதாக இருந்தபோதும் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது என்பதைப் பதிவு செய்தாக வேண்டிய தருணம் இது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT