ஆட்டம் ஆரம்பம்...  சித்திரிப்பு / விஜய்
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... எடப்பாடி வைத்த செக்! நான்கா, ஐந்தா கூட்டணிகள்?

எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமளித்து கூட்டணி தொடர்பாகக் குழப்பத்தைத் தொடக்கிவைத்த அதிமுக பொதுக்குழு தீர்மானத்தின் தொடர்ச்சியாக...

எம். பாண்டியராஜன்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் மிகச் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கூட்டணிகளிடையே விரைவில் ஒரு தெளிவு ஏற்படுத்துவதைப் போல ஒரு தீர்மானத்தை நிறைவேற்றித் தொடக்கி வைத்திருக்கிறது அதிமுக.

தமிழ்நாடு அரசியலில் முன்னெப்போதுமில்லாத வகையில் தேர்தலுக்கு ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் இருக்கும்போதே திடீரென பாரதிய ஜனதா – அதிமுக கூட்டணியை அமித் ஷாவும் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தனர். மக்களவைத் தேர்தலில் கூட்டணியை முறித்துத் தனித்தனியே போட்டியிட்ட நிலையில், அதுவரையில் கடுமையாக விமர்சித்துவந்தாலும் உடனே தடாலடியாக ஒரு யு டர்ன் எடுத்து பாரதிய ஜனதாவை ஆதரிக்கத் தொடங்கினார் பழனிசாமி.

ஆனாலும் தொடர்ந்து, இவ்விரு கட்சிகளின் கூட்டணியில் இன்னமும்  வெளிப்படையாகப் புலனாகாத ஏதோ நிச்சயமின்மை நிலவுவதாகவே இந்தக்  கட்சிகளின் ஒருபகுதி தலைவர்களும், பரவலாக அதிமுக தொண்டர்களும் கருதுகின்றனர்.

ஏனென்றால், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என்று தொடர்ந்து குறிப்பிட்டு வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, அறிந்தோ அறியாமலோ, இன்னமும் ஒரு முறைகூட எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர் என்று மட்டும் சொல்லவே இல்லை. சில நாள்கள் முன் அகமதாபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோதுகூட, பிகாரைத் தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியமைக்கும் என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார் அமித் ஷா (பிகாரில் கூட்டணி அரசு பற்றி எல்லாருக்கும் தெரிந்ததே; முதல்வர் நிதீஷ் குமார் என்றாலும் அதிகாரத்துக்கான முதுகெலும்பான  உள் (காவல்) துறையே துணை முதல்வரான பாஜகவிடம்தான் இருக்கிறது!).

இந்த நிலையில்தான் சில நாள்களுக்கு முன் (டிச. 10-ல்) நடந்த அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் கறாரான ஒரு தீர்மானத்தை முதல் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறது அதிமுக!

“2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை தாங்குகிறது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தேசிய அளவில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தேசியக் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாட்டில் அதிமுக தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளது.

“இந்தக் கூட்டணியின் ஒரே நோக்கம் திமுக ஆட்சியை வீழ்த்துவதுதான். இந்த இலக்கை நோக்கிய கூட்டணியில் ஏற்கெனவே சில அரசியல் கட்சிகள் தொடர்கின்றன.

“ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதி, அரசியலில் பொது எதிரியான திமுகவை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடையவர்கள், திமுக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்ற மனநிலையில் உள்ள மேலும் சில கட்சிகள் இந்தக் கூட்டணியில் இணைகிற வாய்ப்பு இருக்கிறது.

“அப்படி, கூட்டணியில் இடம் பெறுகிற கட்சிகள், கூட்டணியின் நோக்கத்தைப் புரிந்துகொள்பவர்களாகவும் கூட்டணியின் தலைமையை ஏற்றுக்கொள்பவர்களாகவும் கூட்டணியின் நோக்கத்தை நிறைவேற்ற முழு மனதோட ஒத்துழைப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், கூட்டணியில் யாரை இணைப்பது என்பது பற்றி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒருமனதாக வழங்கியுள்ளது பொதுக்குழு.

கூடவே, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கழக ஆட்சி அமைவதற்கு உறுதியேற்றுச் சூளுரைப்போம் என்று நிறைவாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆக, இப்போது அதிமுக தரப்பிலிருந்து ஒரு விஷயம் மிகத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது (யாருக்கு என்பது புரிந்துகொள்பவர்களைப் பொருத்தது), அதிமுக – பாஜக கூட்டணியில் யார் யாரெல்லாம் இடம் பெறுவார்கள், இடம் பெற வேண்டும் என்பதைத் தீர்மானிக்கப் போவது எடப்பாடி பழனிசாமி மட்டுமே, அமித் ஷாவோ, பாரதிய ஜனதா கட்சியோ அல்ல.

அல்லாமல் பொதுக்குழுவில் உரையாற்றும்போது, 210 இடங்களில் கூட்டணி வெற்றி பெறும்; பெரும்பான்மை பலத்துடன் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என்றும் குறிப்பிட்டார் பழனிசாமி.

ஆனால், சசிகலா உள்பட அனைத்துப் பிரிவினரும் மீண்டும் ஒன்று சேர்ந்து ஜெயலலிதா காலத்து அதிமுகவாக சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றுதான் பாரதிய ஜனதா கட்சித் தலைமை விரும்புவதாகக் கூறப்படுகிறது; நம்பப்படுகிறது. அதற்கேற்றார்போலவே அதிமுக தலைவர்கள் அவ்வப்போது தில்லி சென்று அமித் ஷா உள்பட பாஜக தலைவர்களைச் சந்தித்துத் திரும்புகின்றனர்.

ஏற்கெனவே, முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை ஏற்க மாட்டேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

ஆனால், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமோ, டிடிவி தினகரன், கே.ஏ. செங்கோட்டையனுடன் சேர்ந்து சென்று பசும்பொன்னில் தேவர் ஜெயந்தியின்போது அஞ்சலி செலுத்தினாலும், இன்னமும் ஒருங்கிணைப்பு ஊசலாட்டத்தில்தான் இருக்கிறார் போல.

விரைவில் எதிர்காலத் திட்டத்தை அறிவிக்கப் போவதாகத் தெரிவித்திருந்த ஓ. பன்னீர்செல்வம், டிசம்பர் முதல் வாரத்தில் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டுத் தில்லி சென்று, அமித் ஷாவைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசிவிட்டு வந்தேன். தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசியல் சூழ்நிலை பற்றி விவாதித்து வந்துள்ளேன் என்று மட்டும் தெரிவித்தார்.

ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரமளிக்கும் அதிமுகவின் இப்போதைய தீர்மானம் இவரைப் போன்றோரின் எண்ணத்துக்கும் – கூடவே பாரதிய ஜனதாவின் யோசனைக்கும் - ஒரேயடியாக முடிவு கட்டியிருக்கிறது. ஏனெனில், இவர்களை எல்லாம் ஒருபோதும் மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ளப் போவதில்லை என்று கிடைக்கிற சந்தர்ப்பத்தில் எல்லாம் பழனிசாமி கூறிவந்திருக்கிறார் – கட்சிக்குள் இருந்தவாறு ஒற்றுமை பற்றிப் பேசி, இம்சையைக் கொடுத்துக் கொண்டிருந்த செங்கோட்டையனுக்குக் கட்டம் கட்டி வெளியேற்றியது இதுதொடர்பான எடப்பாடியின் ஓர் எச்சரிக்கை சிக்னல்!

அதிமுக பொதுக்குழுப் பேச்சில், மேலும், 2026 தேர்தலில் நல்ல கூட்டணி அமையும், கவலைப்படாதீர்கள். அதிமுகவைப் பொருத்தவரை சொந்த பலம் வாய்ந்த கட்சி... ... வழக்கமாக எல்லா தேர்தலிலும் தேர்தல் அறிவிப்புக்கு ஒரு மாதம் முன்புதான் கூட்டணி அமைப்போம். அதேபோல இப்போதும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

நல்ல கூட்டணி அமையும் என்றால், இப்போதுள்ள கூட்டணி, நல்ல கூட்டணி இல்லையா? அல்லது கூட்டணியே இல்லையா? கவலைப்பட வேண்டாம் என்றால், தற்போதைய நிலைமைக்காக யார் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? என்றால், சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி பற்றி என்னதான் சொல்ல வருகிறார் எடப்பாடி பழனிசாமி? ஓராண்டுக்கு முன்னரே கூட்டணி அமைத்து, அறிவிக்கப்பட்டும்விட்ட பிறகு, இந்தக் கூட்டணிதான் ஆட்சியமைக்கும் என்று அமித் ஷாவும் தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென எல்லாரையும் மிகத் தெளிவாகக் குழப்பி விட்டிருக்கிறாரோ பழனிசாமி?

அடுத்த கட்டமாக, முதல் கட்சியாக, அதிமுக சார்பில் போட்டியிட 15 ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்றும் அறிவித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இந்த நிலையில் பொதுக் குழுத் தீர்மானங்களைத் தொடர்ந்து, மறுநாள், டிச. 11,  எடப்பாடி பழனிசாமியை அவருடைய இல்லத்துக்குச் சென்று சந்தித்திருக்கிறார் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன். அவருடன் மேலும் இரு தலைவர்கள் சென்றிருந்தபோதிலும், இருவர் மட்டுமே தனியாக  ஒன்றரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சந்திப்பின்போது, ஓபிஎஸ், டிடிவி போன்றவர்களை எல்லாம் கட்சியிலோ, கூட்டணியிலோ சேர்த்துக் கொள்ள முடியாது, கூடவும் கூடாது என்று நாகேந்திரனிடம் இபிஎஸ் தெளிவுபடுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. யாரைச் சேர்த்துக்கொள்வது, எவ்வளவு தொகுதிகள் என்பது பற்றியெல்லாமும்கூட பேசப்பட்டதாகத் தெரிவிக்கிறார்கள். தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் தில்லி சென்றிருக்கிறார்.

இதனிடையே, ஏற்கெனவே டிடிவியைச் சந்தித்த நிலையில், தில்லி சென்று அமித் ஷாவையும் கட்சித் தலைவர் நட்டாவையும் பார்த்துத் திரும்பிய பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலையோ, 2021 பேரவைத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் அனுபவங்களிலிருந்து சில கருத்துகளை மேலிடத்தில்  தெரிவித்துள்ளதாகவும், கூட்டணியில் ஒருவர் இருந்தால் என்ன லாபம், என்ன   நஷ்டம் என்று எடுத்துச் சொன்னதாகவும் ஆனால், பேசியதைப் பொதுவெளியில் தெரிவிக்க முடியாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆக, ஓராண்டுக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட கூட்டணிக்குள் என்னவோ அல்லது என்னென்னவோ நடந்துகொண்டிருக்கிறது போல. பொது வெளியில் தெரிவிக்கும்போது எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டியதுதான். கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே தீர வேண்டும்?

அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும் தேமுதிகவும் இந்தக் கூட்டணியை நோக்கியிருக்கின்றன. பா.ம.க.வைச் சேர்ந்த பாலுவோ எடப்பாடியையும் சந்தித்திருக்கிறார், தவெக ஆனந்த்தையும் சந்தித்திருக்கிறார் – போராட்ட அழைப்பு கொடுப்பதற்காக.

இன்னொரு பக்கம் புத்தம் புது ரிலீஸான தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் ஆட்சி செய்துவரும் திமுக மற்றும் அதிமுகவை சாதுர்யமாக எதிர்கொண்டு, த.வெ.க.வின் வாக்குகளைச் சிதறவிடாமல் விழிப்புடன் செயல்பட்டு விஜய்யை முதல்வராக அமரவைத்து அழகுபார்க்க வேண்டும் என்று எப்போதும் போல மீண்டும் ஒருமுறை தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தைச் சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, அவரின் தலைமையை விரும்பி வருவோரைக் கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும், கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்கத் தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கப்படுகிறது என்றும் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் என்ன, இந்தக் கூட்டத்துக்கேகூட கட்சித் தலைவர் விஜய் வரவில்லை என்பது ஹைலைட்!

பரபரப்பூட்டி, மிகவும் மெனக்கெட்டு நடத்தப்பட்ட புதுச்சேரி பிரமாண்ட கூட்டத்தில், வெறும் 11 நிமிஷங்களே சிறப்புரையாற்றி சாதனை படைத்த தவெக தலைவர் விஜய், பாதுகாப்புக் கொடுத்து, பாரபட்சம் காட்டாமல் நடந்துகொள்வதாக புதுவை அரசுக்கும் முதல்வருக்கும் மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

த.வெ.க. அணியாக மாறும் வாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள் பலரும் விரைவில் இணைவார்கள் என்று கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துக் கொண்டிருக்கிறார். இவர்களில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவரும் ஒருவர் என்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சி தனி அணி. த.வெ.க. இன்னொரு அணி. ஆளும் திமுக கூட்டணி. எதிர்க்கட்சியான அதிமுகவின் கூட்டணி. ஏதேனும் சில விஷயங்களில் உறுதியாக / விடாப்பிடியாக இருப்பதன் மூலம்  கடைசி நேரத்தில் (அந்த ஒரு மாதம் முன்!) பாரதிய ஜனதாவைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிட முனைகிறாரா எடப்பாடி பழனிசாமி? என்ன செய்யத் திட்டமிடுகிறார் அவர்? அதிமுக தொண்டர்கள் என்ன நினைக்கிறார்கள்? இன்னோர் அணி உருவாகும் நெருக்குதல் ஏற்படுமா?

ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கூட்டணியும் ஒவ்வொரு விதமான கணக்கைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களும் ஏதாவொரு கணக்கைப் போட்டுக்கொண்டுதான் இருப்பார்கள்!

சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை நினைத்துக் கொண்டிருக்கிற மாதிரி நான்கு அணிகள்தான் போட்டியிடுமா? அல்லது ஐந்தாக அணி வகுக்குமா? இன்னும் சில வாரங்களில் தெளிவாகிவிடும். ‘சீக்கிரமா தீர்ப்பச் சொல்லுங்கப்பா’ என்று தெளிவை நோக்கி விரைவுபடுத்தியிருக்கிறது அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள். பார்க்கலாம்!

இதையும் படிக்க... சொல்லப் போனால்... இண்டிகோவும் ஏகபோகங்களும்!

Following the AIADMK general council resolution that empowered Edappadi Palaniswami and sparked confusion over the alliance...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; அணியில் இரண்டு மாற்றங்கள்!

நமக்கான காலம்! பராசக்தி 3-வது பாடல்!

இந்த வாரம் கலாரசிகன் - 14-12-2025

கம்பன் காட்டும் படிநிலைப் பணிகள்

காந்தள் வேலிச் சிறுகுடி

SCROLL FOR NEXT