ஓபிஎஸ் ‘பர்ஸும்’ தப்பவில்லை: பறக்கும் படை அதிரடி!
ஓ.பன்னீர்செல்வத்தின் கார், பிரசார வேனில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார், பிரசார வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக சோதனையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஓபிஎஸ் ஈடுபட்டு வருகிறார்.
இதற்கிடையே, கடந்த வாரம் அறந்தாங்கியில் ஓபிஎஸ்ஸுக்கு ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அவர் ரூ.1,000 வழங்கிய விடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து, அறந்தாங்கி காவல்துறையினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், இன்று காலை பிரசாரத்துக்கு காரில் சென்று கொண்டிருந்த ஓபிஎஸ்ஸை வழிமறித்த தேர்தல் பறக்கும் படையினர் அவரின் கார் முழுவதும் சோதனையிட்டனர்.
தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் வைத்திருந்த ‘பர்ஸை’யும் திறந்து காட்ட சொல்லி, அதில் எவ்வளவு பணம் உள்ளது என்பதையும் சோதனையிட்டதால் தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.