முகப்பு
மனநல மருத்துவம்

ஃபேஸ்புக் மன அழுத்தத்தைக் குறைக்கிறது : ஆய்வு!

இணையதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும்

Updated On : 29 நவம்பர், 2016 at 6:28 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:19 AM

இணையதளப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில். இது எங்கே கொண்டு போய் முடிகிறதோ, நாடு நாசமாகப் போகிறது என்றெல்லாம் ஒரு பகுதியினர் விமரிசனம் செய்தாலும், அதிலுள்ள நல்ல விஷயங்களால் பலருக்கு நன்மை ஏற்படுகின்றது. நீண்ட நேரம் ஃபேஸ்புக்கில் இருப்பது, அதற்கு அடிமையாவது போன்ற எதிர்மறை விஷயங்கள் இருக்கிறது, ஆனால் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் அதைப் பயன்படுத்துபவர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கிறது என்கிறது சமீபத்திய ஆராய்ச்சியொன்று.

இணையத்தில் செய்திகள், கட்டுரைகள், கருத்து விவாதங்கள், என பல விஷயங்கள் தங்கு தடையின்றி படிக்கக் கிடைக்கின்றன. சமூக வலைத்தளங்களில் அவரவர் பக்கத்தில் கவிதை முதல் ஜென் வரை, அரசியல் முதல் ஆராய்ச்சிகள் வரை, கருத்துக்கள் முதல் சண்டை சச்சரவுகள் வரை, திரைச் செய்திகள் முதல் விமரிசனங்கள் வரை எழுதுகிறார்கள், படிக்கிறார்கள். எது குறித்தும் ஒரு கருத்தும், கருத்தை சார்ந்த ஒரு சுதந்திரமும் அவர்களுக்கு அங்கு கிடைக்கிறது. இவ்வகையில் சூரியனின் கீழுள்ள அனைத்து விஷயங்களும் இங்கு ஆராயப்படுகின்றன. வம்புகளும், மரபு வழியாக வந்த நவீன குழாயடி சண்டைகளுக்கும் குறைவில்லை. எனினும் அவை தவிர்த்து ஏராளமான நல்ல விஷயங்களும் கொட்டிக் கிடக்கின்றன. எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதில் தான் நம்முடைய பங்கு இருக்கிறது. நீரைத் தவிர்த்து பாலை மட்டும் அருந்தும் அன்னபட்சிகளைப் போல இணையத்தில் உலவினால் அது நம் மனநலத்துக்கு மிகவும் உகந்தது என்கிறது அந்த ஆராய்ச்சி. அதற்கு முக்கியமாக ரியல் டைமில் இணையத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதும் கணக்கில் எடுக்கப்படவேண்டும்.

சைபர் சைக்காலஜி என்னும் பத்திரிகை இதை தான் வலியுறுத்துகிறது. சமூக வலைத்தளங்களில் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை பெறுகி வருவதுடன், மற்றவர்களின் பிரச்னைகளைப் பார்த்து நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்கும் அளவிற்கு மன பாரங்கள் குறைகின்றன. தவிர இன்று மனநிலை அல்லது உடல்நிலை சரியில்லை என்ற நிலைத்தகவலைப் பதிவிட்டால் ஆறுதல் சொல்பவர்களின் எண்ணிக்கை சம்பந்தப்பட்டவரின் மனநிலையில் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திவிடுகிறது. வெளிப்படையாக தங்களின் பிரச்னையை கூறும்போது, வெவ்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன், சரியான வழிகாட்டுதலும் கிடைக்கிறது. இவை வாழ்தலுக்கான காரணங்களும் மன உறுதியும் அதிகரிக்கச் செய்கிறது. மனரீதியாக அவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் பெறுகிறார்கள். மன அழுத்தம் காரணமாக ஒருவர் மருத்துவரை சந்திக்கும் போது அவருக்கு கிடைத்த ஆறுதல்கள் தெரிந்த நபர்களிடமிருந்து சமூக வலைத்தளங்களில் பேசிக் கொண்டிருக்கும் நண்பர்களிடமிருந்தா என்பதையும் மருத்துவர்கள் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் பிரிட்டேன் லான்செல்ஸ்டர் பல்கலைக்கழக பேராசியர்கள் டேவிட் பேக்கர் மற்றும் குவிலெர்மோ அல்கோர்டா.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.