எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து இல்லை: மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
புதுதில்லி: எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படாது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
தற்பொழுது வீடுகளுக்கு மானியத்துடன் ஆண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட 12 சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்பிறகு, வீடுகளுக்கு வழங்கப்படும் எரிவாயு உருளைகள் சந்தை விலையிலேயே அளிக்கப்படுகின்றன. அதாவது, 12 எண்ணிக்கை வரையிலான சமையல் எரிவாயு உருளைகளுக்கு சந்தாதாரர்களால் அளிக்கப்படும் தொகையில், மானியத் தொகை மட்டும், அவர்களது வங்கிக் கணக்கில் எண்ணெய் நிறுவனங்களால் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன. 12 எண்ணிக்கைக்குப் பிறகு வழங்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு, மானியம் அளிக்கப்பட மாட்டாது.
சமையல் எரிவாயு உருளைகளுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்து மானியங்களையும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ரத்து செய்வதென்றும், மேலும், மானிய விலை சமையல் எரிவாயு உருளை மீதான விலையை மாதந்தோறும் ரூ.4 உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. என்று நேற்று தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2016-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளின் விலையை மாதந்தோறும் தலா ரூ.2 உயர்த்திக் கொள்வதற்கு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இந்நிலையில், 2017-ஆம் ஆண்டு மே மாதம் 30-ஆம் தேதி பிறப்பித்த மற்றொரு உத்தரவில், 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் மானிய விலை சமையல் எரிவாயு உருளைகளின் விலையை மாதந்தோறும் தலா ரூ.4 உயர்த்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
சமையல் எரிவாயு உருளைக்கு அரசால் வழங்கப்படும் மானியங்கள் பூஜ்யம் என்ற அளவுக்கு வரும் வரையிலோ அல்லது 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்லது மத்திய அரசின் அடுத்த உத்தரவு வரும் வரையிலோ இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த பதிலில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த விவகாரம் இன்று பெரும் புயலைக் கிளப்பியது. எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதினைத் தொடர்ந்து, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த விளக்கம் பின்வருமாறு:
எரிவாயு சிலிண்டர் மானியம் தொடர்பான எதிர்கட்சிகளின் போராட்டம் அர்த்தமற்றது. நீங்கள் கூறுவது போல எரிவாயு சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்பட மாட்டாது. அதில் உள்ள குறைகள் களையப்பட்டு அந்த முறை சீராக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் பிரதான் பதிலளித்தார்.