வெவ்வேறு வடிவங்களில் ரூ.500 நோட்டுகள்: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ரூ.500 நோட்டுகள் வெவ்வேறு வடிவங்களில் அச்சிடப்பட்டிருப்பதற்கு விளக்கமளிக்கக் கோரி
பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய ரூ.500 நோட்டுகள் வெவ்வேறு வடிவங்களில் அச்சிடப்பட்டிருப்பதற்கு விளக்கமளிக்கக் கோரி மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் பி.ஜே. குரியன் தலைமையில் வியாழக்கிழமை கூடியது. அவை அலுவல்கள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, புதிய ரூபாய் நோட்டுகள் வெவ்வேறு வடிவங்களில் அச்சடிக்கப்பட்டிருப்பது குறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர்.
அப்போது அவையில் இருந்த மத்திய நிதியமைச்சர் ஜேட்லி, 'எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பயனற்ற விவகாரங்களை வேண்டுமென்றே எழுப்பி மாநிலங்களவை அலுவல்களை முடக்கப் பார்க்கின்றனர்' என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆதரவாக திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தள உறுப்பினர்களும் குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆஸாத் (காங்கிரஸ்) பேசினார். அவர் கூறியதாவது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மத்திய அரசு புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நோட்டுகள் யாவும் ஒரே மாதிரியாக இல்லாமல் வெவ்வேறு வடிவங்களிலும், அளவுகளிலும் அச்சடிக்கப்படுகின்றன. இது, இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலாகும். இதற்கு மத்திய அரசு என்ன பதிலளிக்கப் போகிறது? எனக் கேள்வியெழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் உறுப்பினர் கபில் சிபல், ஒழுங்குப் பிரச்னையை எழுப்பி பேசியதாவது:
புதிய ரூபாய் நோட்டுகள் வெவ்வேறு மாதிரியாக அச்சடிக்கப்படுவது மிகவும் தீவிரமான பிரச்னையாகும். இதுகுறித்து பேசினால், நிதியமைச்சர் அருண் ஜேட்லி அலட்சியமாக பதிலளிக்கிறார். வேறு வேறு அளவுகளில் புதிய ரூபாய் நோட்டுகள் வருகின்றன. இவற்றில் ஒரு வகை நோட்டுகள், ஆளுங்கட்சியினருக்கும், மற்றவை, பொதுமக்களுக்கும் அச்சடிக்கப்படுகிறதா? பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு ஏன் எடுத்தது என்பது இப்போதுதான் தெரியவந்திருக்கிறது என்றார் கபில் சிபல்.
கபில் சிபலின் இந்தக் கருத்துக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் குரல் கொடுத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.
அப்போது பேசிய மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே. குரியன், 'வெவ்வேறு மாதிரியான ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டிருந்தாலும், அதுகுறித்து ஒழுங்குப் பிரச்னையை எழுப்ப முடியாது. இதுதொடர்பாக தனியாக நோட்டீஸ் அளித்துவிட்டு இந்த விவகாரம் குறித்து விவாதிக்கலாம்' என்றார்.
ஆனால், இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரம் குறித்து இப்போதே விவாதிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். இதனால், பி.ஜே. குரியன் அவையை அரைமணி நேரம் ஒத்திவைத்தார்.
பின்னர் மாநிலங்களவைத் தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் அவை கூடியதும், இதே விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை தங்கள் இருக்கைகளுக்குச் செல்லும்படி அவைத் தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால், இதனை ஏற்காமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை அடுத்தடுத்து மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பிரதமர் விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
மத்திய அரசு 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை இரு வேறு விதமாக அச்சடித்ததால் இந்திய கரன்சியின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி மாநிலங்களலவையில் குற்றம்சாட்டியது. இந்த முரண்பாடு தொடர்பாக பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியது.
இந்த விவகாரத்தை மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி.யான கபில் சிபல் செவ்வாய்க்கிழமை எழுப்பினர். அவர் பேசியதாவது:
மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது இந்திய ரூபாய் நோட்டுகள் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விளக்கமளிக்கும் வரை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பிரச்னை எழுப்புவோம்.
உயர் மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற மத்திய அரசின் திட்டம் அதன் இலக்குகளான ஊழல், கருப்புப் பணம், கள்ள நோட்டு மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றை ஒழிப்பது என்பதை எட்டுவதில் தோல்வியடைந்து விட்டது.
இந்தச் சூழ்நிலையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, 1000 நோட்டுகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை எடுத்ததில் தங்களின் நோக்கம் என்ன என்பதை அரசு விளக்க வேண்டும்.
மேலும், புதிய நோட்டுகளை அச்சடிக்க என்ன மை பயன்படுத்தப்பட்டது? என்ன வகையிலான நோட்டுகள் அச்சிடப்பட்டன? வெவ்வேறு வகையிலான நோட்டுகள் எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்
டன என்பதை அவர்கள் விளக்கிக் கூற வேண்டும்.
இது தொடர்பாக பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்றார் கபில் சிபல்.
இதனிடையே, மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை நாட்டின் மிகப் பெரிய ஊழல் என்று குற்றம்சாட்டி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட அவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.