கடவுளைத் தவிர வேறு யாராலும் எங்களை மிரட்ட முடியாது: மௌனம் கலைத்தார் டிடிவி தினகரன்
கடவுளைத் தவிர வேறு யாராலும் எங்களை மிரட்ட முடியாது என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: கடவுளைத் தவிர வேறு யாராலும் எங்களை மிரட்ட முடியாது என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு கட்சிகளும் இணைந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில், நீண்ட அமைதிக்குப் பின் மௌனத்தைக் கலைத்தார் டிடிவி தினகரன்.
சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தொண்டை வலியால் அவதிப்படுவதாகவும், தன்னால் நீண்ட நேரம் பேச முடியாது என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போது நடப்பது துரோகத்துக்கும் தியாகத்துக்கும் இடையே நடக்கும் தர்ம யுத்தம். வி.கே. சசிகலாவை நீக்குவோம் என்று கூறுபவர்களுக்குப் பாடம் புகட்டவே 19 எம்எல்ஏக்களும் ஒன்றாக உள்ளனர்.
தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்து தமிழகம் மட்டுமல்ல, இந்திய துணைக் கண்டமே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது.
பயந்து கொண்டு யாரும் புதுச்சேரி செல்லவில்லை. பணம் பாதாளம் வரை பாயும் என்கிறார்கள். ஆனால், தியாக உணர்வோடு இருக்கும் 19 எம்எல்ஏக்களையும் யாராலும் அசைக்க முடியாது. கடவுளைத் தவிர வேறு யாராலும் எங்களை மிரட்ட முடியாது. அதிமுகவை காப்பாற்ற தியாக உணர்வுடன் 19 எம்எல்ஏக்களும் புதுச்சேரியில் தங்கியுள்ளனர்.
என்னுடன் நிற்பவர்கள் அனைவரும் தர்மத்தின் பக்கம் நிற்கின்றனர். ஆளுநர் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று 19 எம்எல்ஏக்களும் நம்பிக்கையோடு இருக்கின்றனர் என்று கூறினார்.