தனி மனித சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்டதுதான்: ஆதார் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்!
தனி மனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று ஆதார் அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
புதுதில்லி: தனி மனித சுதந்திரம் என்பது சட்டத்திற்கு உட்பட்டதுதான் என்று ஆதார் அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மத்திய அரசின் பெரும்பாலான சேவைகள் மற்றும் மானிய உதவிகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆதார் அட்டை விவகாரத்தில் குடிமக்களின் தனி மனித சுதந்திரம் உள்ளிட்ட விஷயங்களும் சம்பந்தப்பட்டிருக்கிறது.
எனவே இதனை அரசியல் சாசன அமர்வின் மூலம் விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்ததன் பேரில் இந்த வழக்கானது 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வின் மூலம், நேற்று முன்தினம் முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கில் இன்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி மத்திய அரசின் நிலையை எடுத்து வைத்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:
தனி மனித சுதந்திரம் என்பது முழுமையான ஒன்றாக இருக்க முடியாது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் படி எந்த ஒரு குடிமக்களும் அரசின் விசாரணைக்கு உட்பட்டவர்கள். எனவே தனி மனித சுதந்திரம் சட்டத்திற்கு உட்பட்ட ஒன்றுதான்.
இவ்வாறு அவர் தனது வாதத்தினை எடுத்து வைத்திருக்கிறார்