உணவுப் பழக்கம் தனி நபர் விருப்பம் சார்ந்தது: வெங்கய்ய நாயுடு
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், உணவுப் பழக்கவழக்கம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்தது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், உணவுப் பழக்கவழக்கம் என்பது தனி நபர் விருப்பம் சார்ந்தது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு அசைவ உணவுப் பழக்கம்தான் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டு மக்கள் அனைவரையும் சைவ உணவு உண்பவர்களாக மாற்றும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதற்குத் தடை விதித்து மத்திய அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதற்கு எதிராக நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்தன.
இதுதொடர்பாக நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி விவாதமொன்றில் பேசிய எதிர்க்கட்சி பிரமுகர் ஒருவர், நாட்டு மக்கள் அனைவரும் சைவ உணவுதான் உண்ண வேண்டும் என்று நிர்பந்திக்கும் நோக்கில் மத்திய அரசு இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மும்பையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த வெங்கய்ய நாயுடுவிடம் இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்துப் பேசியதாவது:
பாஜக மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. உணவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. என்ன வகையான உணவை உண்ண வேண்டும் என்பது தனிநபரின் விருப்பம் சார்ந்தது. இன்று வரை எனக்கு அசைவ உணவுப் பழக்கமே உள்ளது. இதையெல்லாம் ஒரு பிரச்னையாக்கி செயல்படக் கூடாது என்றார் அவர்.