பிகார், உ.பி. சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயாரா?: பாஜகவுக்கு நிதீஷ் குமார் சவால்
பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயாரா? என்று பாஜகவுக்கு பிகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத்
பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தத் தயாரா? என்று பாஜகவுக்கு பிகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தேசியத் தலைவருமான நிதீஷ் குமார் சவால் விடுத்தார்.
பிகாரில் தாம் செயல்படுத்திய நலத் திட்டங்கள் மீது நம்பிக்கையிருந்தால், அந்த மாநில சட்டப் பேரவையைக் கலைத்துவிட்டு மீண்டும் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக சவால் விடுத்திருந்த நிலையில், அக்கட்சிக்கு பதிலளிக்கும் வகையில் நிதீஷ் குமார் இவ்வாறு தெரிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கேசவ் பிரசாத் மௌரியா, பிகார் மாநில சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்த தயாரா? என்று நிதீஷ் குமாருக்கு சவால் விடுத்திருந்தார்.
இதுகுறித்து பிகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் நிதீஷ் குமார் திங்கள்கிழமை பேசியபோது கேள்வியெழுப்பப்பட்டது.
அப்போது அவர், பிகார் மாநில சட்டப் பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்துவது தொடர்பான பாஜகவின் சவாலை தாம் ஏற்பதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:
பிகார் சட்டப் பேரவைக்கு தேர்தல் நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன். ஆனால், அந்தத் தேர்தலானது, உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைத் தேர்தலுடன் இணைந்து நடத்தப்பட வேண்டும். பாஜகவுக்கு துணிச்சல் இருந்தால், பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும். நாளைக்கே தேர்தல் நடத்த அவர்கள் விரும்பினாலும் நான் தயாராக இருக்கிறேன்.
அதுமட்டுமன்றி, பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அந்த இடங்களுக்கும், பிகார், உத்தரப் பிரதேச மாநில சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்தும்போது தேர்தல் நடத்த வேண்டும் என்று நிதீஷ் குமார் கூறினார்.
ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் திக்ஷித் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து குறித்த கேள்விக்கு நிதீஷ் குமார் பதிலளிக்கையில், 'அவர் என்ன தெரிவித்தார் என்பது குறித்து எனக்குத் தெரியாது;
எனினும், ராணுவத்தின் மீது நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகுந்த மரியாதை உள்ளது. ராணுவத் தலைமைத் தளபதி என்பவர், ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரதிநிதியாவார். மக்கள் பணிகளைத்தான் அவர் செய்கிறார்' என்றார்.