பசு காவலர்களுக்கு மோடி எச்சரிக்கை: பசு பக்தி என்ற பெயரில் மக்களைக் கொல்வதை ஏற்க முடியாது
பசுவைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு, பொதுமக்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இந்தியாபசு காவலர்களுக்கு மோடி எச்சரிக்கை: பசு பக்தி என்ற பெயரில் மக்களைக் கொல்வதை ஏற்க முடியாது
பசுவைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு, பொதுமக்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பசுவைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு, பொதுமக்களைக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி வியாழக்கிழமை குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்தார்.
அங்கு ஆமதாபாத் நகரில் நடைபெற்ற சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழா மற்றும் சமணத் துறவி ராஜ்சந்திராவின் 150-ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டார். விழாவில், அவர் பேசியதாவது:
பசுவைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு பொதுமக்களைக் கொல்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
வன்முறைச் செயல்களால், ஒருபோதும் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்காது.
எறும்பு, நாய்கள், மீன்கள் போன்ற ஜீவராசிகளுக்கு உணவளித்த பாரம்பரியத்தைக் கொண்டது நமது இந்திய சமூகம். மகாத்மா காந்தி, அஹிம்சையை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால், உண்மையில் இங்கு என்ன நடக்கிறது?
மருத்துவமனையில் நோயாளி ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தால், அந்த மருத்துவமனை சூறையாடப்படுகிறது. மருத்துவர்கள் தாக்கப்படுகிறார்கள். ஓரிடத்தில் விபத்து நேரிட்டு யாராவது உயிரிழந்தால், மக்கள் ஒன்று கூடி வாகனங்களுக்குத் தீ வைக்கிறார்கள்.
பசுப் பாதுகாப்புக்கு, மகாத்மா காந்தியை விட யாரும் முக்கியத்துவம் அளித்திருக்க மாட்டார்கள். பசுவை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியும், அவரது வழிவந்த வினோபா பாவேவும் நமக்கு வழி காட்டியிருக்கிறார்கள்.
பசுவை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் நமக்கு கற்றுத் தருகிறது. ஆனால், அதே நேரத்தில், பசுவைப் பாதுகாப்பதற்காக, மற்றவர்களைக் கொல்வதற்கு நமது சட்டம் எந்த அதிகாரத்தையும் நமக்கு கொடுக்கவில்லை.
நாட்டில் சட்டத்தைக் கையிலெடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. பசு பக்தி என்ற பெயரில் மற்றவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவது, தேசப்பிதா காந்தியின் கொள்கைகளுக்கு எதிரானதாகும். இவ்வாறு பொதுமக்களைக் கொல்வதை மகாத்மா காந்தியும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்.
எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அவரது கனவு தேசத்தை உருவாக்குவோம். நமது சுதந்திரப் போட்ட வீரர்கள் பெருமைப்படும் விதமாக, நமது தேசத்தை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
உத்தரப் பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தினரை மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள், தேச விரோதிகள் என்று கூறி வந்த ஒரு கும்பல், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை ஓடும் ரயிலில் அடித்துக் கொன்றது. இதேபோல், நாட்டின் பல பகுதிகளிலும் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் பிரதமர் மோடி இவ்வாறு கூறியுள்ளார்.
குஜராத் புதிய உச்சமடையும்- மோடி: இதனிடையே, நர்மதை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைத் திட்டத்தால், குஜராத் மாநிலம் அடுத்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், புதிய உச்சத்தை அடையும் என்று பிரதமர் மோடி கூறினார்.
ஆமதாபாத் நகர் விமான நிலையத்தில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார்.
இந்தத் திட்டப்பணிகள் நிறைவடைவதற்குப் பாடுபட்ட காங்கிரஸ் உள்பட முந்தைய மாநில அரசுகளுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையின் நீர்மட்டத்தை 138 மீட்டராக உயர்த்துவதற்காக, அணையின் கதவுகளை மூடுவதற்கு மத்திய அரசு கடந்த 17-ஆம் தேதி அனுமதி அளித்தது. இதனால், அணையில் அதிக அளவு நீரைத் தேக்கி வைக்க முடியும்.