இந்தியா

மோடி என்ன செய்தாலும் தெலுங்கு தேச அரசு பயப்படாது: சந்திரபாபு நாயுடு சூளுரை 

DIN

திருமலை: பிரதமர் மோடி என்ன செய்தாலும் அதற்கெல்லாம் தெலுங்கு தேச அரசு பயப்படாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சூளுரைத்துள்ளார்.

திருப்பதியில் உள்ள தாரகராமா விளையாட்டு மைதானத்தில் தெலுங்கு தேசம் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

எப்போது தேர்தல் வந்தாலும் நான் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின்னர்தான், தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவது வழக்கம். அதன்படி நான் திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தேன்.

இந்தத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு நான் வெற்றி பெறுவேன். தேர்தல் தொடர்பாக நான் தினமும் நமது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடியிடம் நான் 18 கோரிக்கைகளை முன் வைத்தேன். ஆனால் அதில் அவர் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. போராட்டம் செய்தாலும், மத்திய அரசு தெலுங்கு தேசம் கட்சி மீது அடக்குமுறைகளை கையாள்கிறது. பிரதமர் நரேந்திர மோடி என்ன செய்தாலும் அதற்கெல்லாம் தெலுங்கு தேசம் கட்சி அரசு பயப்படாது.

நமது கட்சி ஆட்சியின்போது, ஐதராபாத் நகரத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டேன். தற்போது அங்கு முதல்வராக இருக்கும் சந்திரசேகரராவ், என்னை விமர்சனம் செய்து வருகிறார். அவருக்கு தகுந்த பாடம் புகட்டுவோம்.

நடைபெற்று வரும் போலவரம் அணை திட்டப்பணிகள் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும். அமராவதி தலைநகரத்தை உருவாக்க எங்களை நம்பி விவசாயிகள் 32 ஆயிரம் ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள். தற்போது தலைமைச் செயலகம் கட்டும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.

ஆந்திராவில் வயது முதிர்ந்த தம்பதியர் என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு மூத்த மகனாக கருதுகிறார்கள். எனவே அவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆந்திர மாநில அரசு, அவர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கி வருகிறது.

மாநிலத்தில் உள்ள பெண்கள், என்னை ஒரு சகோதரனாக பார்க்கிறார்கள். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு மஞ்சள்-குங்குமம் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் வேளாண் கடன் ரூ.24 ஆயிரத்து 500 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுபோல எந்த ஒரு மாநிலத்திலும் யாரும் செய்ததில்லை. விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் அண்ணா கேண்டீன் திறக்கப்பட்டு ஏழை எளிய மக்களுக்கு மலிவு விலையில்  உணவு வழங்கப்பட்டு வருகிறது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவச் சிகிச்சைக்காக அளிக்கப்பட உள்ளது. மாநிலத்தில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருகிறது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாநிலத்தில் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின் கட்டணமும் உயர்த்தப்படவில்லை. மாநிலத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடியில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மக்கள் ஒன்றாக இணைந்து வாக்களித்து தெலுங்கு தேசம் கட்சியை 150-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளிலும், 25 மக்களவை தொகுதிகளிலும் வெற்றி பெற வைக்க வேண்டும். இதுவே என் லட்சியம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

புழல் சிறையில் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

ஆண்களிடம் ஆபாசமாக பேசி பணம் பறிப்பு: 5 போ் கைது

SCROLL FOR NEXT