முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி தெலங்கானா வரவுள்ள நிலையில் காங்கிரசில் இருந்து விலகிய முக்கிய தலைவர் 

மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிறன்று தெலங்கானா வரவுள்ள நிலையில், மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.

Updated On : 31 மார்ச், 2019 at 3:56 PM
பகிர்:

ஐதராபாத்: மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிறன்று தெலங்கானா வரவுள்ள நிலையில், மூத்த தலைவர் ஒருவர் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவர் சுதாகர் ரெட்டி.  அக்கட்சியில் இளைஞர் அணி அமைப்பாளர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவராக பணியாற்றி வந்தார்.

மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது, சுற்றுலாத்துறை வாரியத் தலைவராக பதவி வகித்துள்ளார். மாநில சட்டசபையில் மேல்சபை உறுப்பினராகவும் இருந்த இவரது பதவிக்காலம் அண்மையில் முடிவுக்கு வந்தது.

Advertisement

எனவே மக்களவைத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஞாயிறன்று தெலங்கானா வரவுள்ள நிலையில், சுதாகர் ரெட்டி காங்கிரசில் இருந்து விலகியுள்ளார்.

தனது ராஜிநாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில், 'கட்சிக்காக உண்மையாக உழைத்த தொண்டர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. அதிக அளவில் பணம் கைமாறுகிறது. வேட்பாளர் தேர்வில் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள்' என்று தெரிவித்துள்ளார்.

சுதாகர் ரெட்டி விரைவில் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் சேருவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.