நீட் தேர்வு: உச்ச நீதிமன்றத்தில் 6 மாநிலங்கள் சீராய்வு மனு தாக்கல்
நீட் தேர்வு விவகாரத்தில் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யவேண்டும் என 6 மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு விவகாரத்தில் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யவேண்டும் என 6 மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ஒத்திவைக்க உத்தரவிட முடியாது என்ற உச்ச நீதிமன்றம் கடந்த 17 ஆம் தேதி அளித்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரியும், நீட் தேர்வினை ஒத்திவைக்கக் கோரியும் மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன.
முன்னதாக, கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து செய்து உத்தரவிட்டது.
நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து, மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதியும், ஜேஇஇ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையிலும், ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.