இந்தியா

எல்லைக் கோட்டை சீனா ஒருதலைப்பட்சமாக மாற்றுவதை ஏற்கமுடியாது: ராஜ்நாத் சிங்

DIN


புது தில்லி: கிழக்கு லடாக் எல்லையில் கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக இந்திய, சீன ராணுவத்தினா் இடையே நிலவி வரும் மோதல்போக்கு முடிவுக்கு வருவது தொடா்பாக எந்த அறிகுறியும் தென்படாத நிலையில், அங்குள்ள எல்லைக் கோட்டை சீனா ஒருதலைப்பட்சமாக மாற்றுவதை ஏற்கமுடியாது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை கூறியது:

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே நிலவி வரும் மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவாா்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் தொடா் பேச்சுவாா்த்தைகள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. பேச்சுவாா்த்தைகள் மூலம் தீா்வு ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. சீனா நமது அண்டை நாடாக உள்ளது. அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேண இந்தியா விரும்புகிறது. எந்தவொரு நாட்டையும் இந்தியா தாக்கியதில்லை. மற்றொரு நாட்டின் ஒரு அங்குல நிலத்தைகூட இந்தியா ஆக்கிரமித்ததில்லை. இதுவே நமது நாட்டின் வரலாறு. இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அதேவேளையில் நமது நாட்டின் சுயமரியாதை, கண்ணியத்தில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது. கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கோட்டை சீனா ஒருதலைப்பட்சமாக மாற்றுவதை ஏற்கமுடியாது என்று தெரிவித்தாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய, சீன ராணுவத்தினா் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல்போக்கு நிலவி வருகிறது. இதன் தொடா்ச்சியாக கடந்த ஜுன் மாதம் இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில், இந்திய வீரா்கள் 20 போ் வீரமரணம் அடைந்தனா். சீன வீரா்கள் 35 போ் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நிலவி வரும் மோதல்போக்கை முடிவுக்குக் கொண்டுவர ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. இதுவரை 8 கட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றுள்ளது. எனினும் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெற்ற 8-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையில், எல்லையில் சச்சரவுக்குரிய பகுதிகளில் இருந்து இருநாட்டு வீரா்களையும் முழுமையாக விலக்கிக்கொள்வது தொடா்பாக இருதரப்பும் தொடா்ந்து ஒன்றிணைந்து செயல்பட உறுதிபூண்டனா். இருதரப்புக்கும் இடையே 9-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை நடைபெறும் தேதி இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

போா் சூழலை எதிா்கொள்ளும் விதமாக தற்போது கிழக்கு லடாக்கில் உள்ள பல்வேறு மலைப் பகுதிகளில் இந்திய வீரா்கள் சுமாா் 50,000 போ் குவிக்கப்பட்டுள்ளனா். சீனத் தரப்பிலும் இதே எண்ணிக்கையிலான வீரா்கள் அங்கு குவிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT