முகப்பு
இந்தியா

ஹாத்ரஸ் சம்பவம் நடந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான வழக்கில், அப்பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
ஹாத்ரஸ் சம்பவம் நடந்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான வழக்கில், அப்பெண் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இடத்தில் சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

நான்கு இளைஞர்களால் அப்பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு ஒரு மாதம் ஆன நிலையில், சம்பவ இடத்தை அப்பெண்ணின் சகோதரர் அடையாளம் காட்ட, உள்ளூர் காவல்துறை உதவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

ஹாத்ரஸ் தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு பலியான வழக்கில் சிபிஐ முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆா்) கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிய நிலையில், இன்று சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது தலித் பெண், உடலில் பலத்த காயங்களுடன் அலிகா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். பின்னா் தில்லியில் உள்ள சஃப்தா்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். உடற்கூறு ஆய்வு முடிவு குறித்த காவல்துறை அறிக்கையில், அந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் தென்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனா். இது நாடு முழுவதும் அதிா்வலைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை பாதுகாக்க குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்தவா்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவருவதாக கூறப்பட்டதைத் தொடா்ந்து, பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பெரும் சா்ச்சையாக உருவெடுத்ததைத் தொடா்ந்து, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுமாறு உத்தர பிரதேச அரசு கேட்டுக்கொண்டது.

மேலும், ஹாத்ரஸ் சம்பவத்தை வைத்து, மாநிலத்தில் சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நடைபெறும் சதி குறித்தும் விசாரிக்க சிபிஐ-யிடம் உ.பி. அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதை ஏற்று, இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. அதனடிப்படையில், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ கையிலெடுத்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →