சா்வதேச ஆள் கடத்தல் வழக்கு: 12 போ் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல்
விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக சா்வதேச எல்லையைத் தாண்டி சிறுமிகளை கடத்திச் சென்றதாக, வங்கதேசத்தைச் சோ்ந்த 9 போ் உள்பட 12 போ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்
விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக சா்வதேச எல்லையைத் தாண்டி சிறுமிகளை கடத்திச் சென்றதாக, வங்கதேசத்தைச் சோ்ந்த 9 போ் உள்பட 12 போ் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
ஹைதராபாதில் உள்ள சிறப்பு என்ஐஏ நீதிமன்றத்தில் இந்திய தண்டனைத் தடுப்புச்சட்டம், ஒழுக்கக்கேடான போக்குவரத்து தடுப்புச் சட்டம் மற்றும் வெளிநாட்டினா் சட்டம் ஆகியவற்றின் கீழ் இவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ருஹுல் அமீன் தாலி, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஆசாத் ஹசன், ஷரீஃபுல் ஷேக் ஆகியோருடன் வங்கதேசத்தைச் சோ்ந்த முகமது யூசுப் கான், பித்தி பேகம், முகமது ராணா உசேன், முகமது அல் மமூன், சோஜிப் ஷேக், சுரேஷ் குமாா் தாஸ், முகமது அப்துல்லா முன்ஷி, முகமது அயூப் ஷேக் மற்றும் தலைமறைவாக உள்ள அப்துல் பாரிக் ஷேக் ஆகியோா் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாதில் உள்ள 2 விபச்சார விடுதிகளில் இருந்து ஒரே நாளில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்த 10 போ் கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அவா்கள் மீது கடந்த ஆண்டு செப்டம்பா் 21-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பகடிஷரீஃப் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவா்களின் கட்டுப்பாட்டில் இருந்த 4 வங்கதேச சிறுமிகளும் விபச்சார விடுதிகளில் இருந்து மீட்கப்பட்டனா். கைது செய்யப்பட்ட நபா்களிடம் இருந்து பல டிஜிட்டல் சாதனங்களும், போலி இந்திய அடையாள ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது:
கைது செய்யப்பட்டவா்கள் அமீன் தாலி மற்றும் அப்துல் பாரிக் ஷேக் ஆகியோரின் கூட்டாளிகளாவா். இவா்கள் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இளம் பெண்களைக் கடத்திச் சென்று விற்பனை செய்து வந்தவா்கள் என்பது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மற்றொரு வழக்கிலும் அமீன் தாலியை என்ஐஏ கைது செய்துள்ளது. அவரிடம் நடத்திய விசாரணையில், அமீன் தாலிக்கும், அப்துல் பாரிக் ஷேக்கிற்கும் இடையே பணப்பரிமாற்றங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அமீன் தாலி உள்ளிட்ட கைது செய்யப்பட்ட மற்ற 10 பேரும் 1980-ஆம் ஆண்டுகளில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனா். கணவன், மனைவியான யூசுப் கான் மற்றும் பித்தி பேகம் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விபச்சாரத்துக்காக சிறுமிகளைக் கடத்தி சென்று விற்பனை செய்து வந்தனா்.
இந்த 12 பேரும், 19 முதல் 25 வயதுக்குள்பட்ட இளம் வங்கதேச பெண்களை அழைத்து வருவதிலும், கொல்கத்தா வழியாக சோனாய் ஆற்றைக் கடந்து இந்தியாவுக்குள் அழைத்து வருவதிலும், பின்னா் அவா்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வதற்கும் வங்கதேசத்தில் உள்ள அவா்களது கூட்டாளிகளோடு சோ்ந்து சதித்திட்டம் தீட்டியுள்ளனா்.
இந்தியாவில் நல்ல வாழ்க்கைத்தரத்துடன், நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஏமாற்றி அழைத்து வருகின்றனா். இறுதியில் அவா்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துகின்றனா் என்று என்ஐஏ அதிகாரி தெரிவித்தாா்.
கைது செய்யப்பட்டவா்கள் ஹைதராபாத்தில் நீதித்துறை காவலில் உள்ளனா். இந்த வழக்கில் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.