முகப்பு
இந்தியா

இந்தியாவில் இதுவரை 5.62 கோடி கரோனா பரிசோதனைகள்: ஐசிஎம்ஆர்

நாட்டில் சனிக்கிழமை ஒரே நாளில் 10,71,702 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

புதுதில்லி: நாட்டில் சனிக்கிழமை ஒரே நாளில் 10,71,702 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது. 

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி, நாட்டில் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை 5 கோடியே 62 லட்சத்து 60 ஆயிரத்து 928 கரோனா நோய்த்தொற்று பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

சனிக்கிழமை காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 10 லட்சத்து 71 ஆயிரத்து 702 க்கும் மேற்பட்டோருக்கு  கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.  

நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பரிசோதனை அதிகரித்து வருவதன் மூலம்  நோய்த் தொற்றுக்கு  பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து அவர்களை விரைவில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலம் தொற்று பரவலை  தடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. 

நாடு முழுவதும் 1,668 பரிசோதனைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. இதில் 1,035 ஆய்வகங்கள் அரசுக்கு சொந்தமானவை. 

நாட்டில் சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே கால அளவில் 1,114 பேர் பலியாகி உள்ளனர். 

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 47,54,357 -ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 78,586-ஆக அதிகரித்துள்ளது. இது கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.66 சதவீதம் ஆகும்.

கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 37,02,596-ஆக உயா்ந்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் குணமடைந்தோா் எண்ணிக்கை 77.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 9,73,175 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.