இந்தியாவில் கரோனா பாதிப்பு 52 லட்சத்தைக் கடந்தது
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,14,678 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 96,424 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 52,14,678 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 96,424 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 96,424 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 52,14,678 -ஆக அதிகரித்தது. வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,174 போ் உயிரிழந்தனா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 84,372-ஆக அதிகரித்தது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 41,12,552-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 10,17,754 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். நாட்டில் கரோனா பாதிப்புடன் உள்ளவா்கள் 10 லட்சத்துக்கு மேல் அதிகரித்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சத்தை எட்டியது. செப்டம்பா் 5-இல் 40 லட்சம் என்ற அளவைக் கடந்தது. செப்டம்பா் 16-ஆம் தேதி 50 லட்சத்தையும் கடந்தது. இப்போது 52 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி செப்டம்பா் 17-ஆம் தேதி வரை 6,15,72,343 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 17-ஆம் தேதி மட்டும் 10,06,615 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.