மலிவு விலையில் பெட்ரோல் வேண்டுமா? பாஜக தலைவரின் பயங்கர யோசனை
மலிவு விலையில் பெட்ரோல் வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள். அங்குதான் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.50க்குக் கிடைக்கும் என்று மத்தியப் பிரதேச மாநில கட்னி மாவட்ட பாஜக தலைவர் பதிலளித்துள்ளார்.
மலிவு விலையில் பெட்ரோல் வேண்டும் என்றால் ஆப்கானிஸ்தான் செல்லுங்கள். அங்குதான் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.50க்குக் கிடைக்கும் என்று மத்தியப் பிரதேச மாநில கட்னி மாவட்ட பாஜக தலைவர் பதிலளித்துள்ளார்.
புதன்கிழமை பாஜக தரப்பில் நடைபெற்ற மரம் நடும் விழாவில் பங்கேற்க வந்த காட்னி மாவட்ட பாஜக தலைவர் ராம்ரத்தன் பாயலிடம் செய்தியாளர்கள் பெட்ரோல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பியதற்கு இவ்வாறு காட்டமாக பதிலளித்துள்ளார்.
இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பொதுமக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
பெட்ரோல் விலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, பாயல் அளித்த பதிலில், தாலிபானுக்குச் செல்லுங்கள். பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.50க்கு ஆப்கானிஸ்தானில்தான் கிடைக்கும். ஆனால், என்ன அதனால் ஒரு பயனும் இல்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், இந்தியாவில் குறைந்தபட்சம் பாதுகாப்பாகவாவது இருக்கிறீர்கள். இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை தாக்க உள்ளது. மீண்டும் நாடு ஒரு கடினமான காலத்தை எதிர்கொள்ளவிருக்கிறது. ஆனால் நீங்கள் என்னவோ பெட்ரோல் விலையைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று பதிலளித்துள்ளார்.
இதுபோலவே, பிகார் மாநில பாஜக எம்எல்ஏ ஹரிபூஷண் தாக்கூர் பெட்ரோல், டீசல் விலை குறித்த கேள்விக்கு, இந்தியாவில் இருக்க யாருக்கெல்லாம் அச்சமாக இருக்கிறதோ அவர்களெல்லாம் ஆப்கானிஸ்தான் செல்லலாம். அங்கு டீசல், பெட்ரோல் விலை கூட குறைவுதான் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.