நாட்டில் மொத்தம் 142.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன: மத்திய அரசு
நாட்டில் இதுவரை மொத்தம் 142.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை மொத்தம் 142.38 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி எண்ணிக்கைகள் குறித்து அமைச்சகம் தெரிவித்துள்ளது:
"திங்கள்கிழமை மட்டும் இரவு 7 மணி வரை 65,20,037 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இரவு வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகளின் முழுமையான தரவுகள் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும். இதுவரை மொத்தம் 1,42,38,12,552 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 83,80,04,579. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் 58,58,07,973."
நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. முன்களப் பணியாளர்களுக்கு பிப்ரவரி 2-ம் தேதி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. அடுத்தகட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் இருக்கும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.
45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ம் தேதி முதலும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1-ம் தேதி முதலும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக 15-18 வயதுடைய சிறார்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், இணை நோய் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முறையே ஜனவரி 3 மற்றும் 10 முதல் மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.