தில்லியில் போராடிய மருத்துவர்களை இழுத்துச் சென்ற காவல்துறை
தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை காவல்துறையினர் இழுத்தும், தூக்கியும் சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புது தில்லி: நீட் முதுநிலை படிப்புக்கான கலந்தாய்வு காலதாமதமாவதைக் கண்டித்து, தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை காவல்துறையினர் இழுத்தும், தூக்கியும் சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மாத காலமாக போராடி வரும் மருத்துவர்கள், நேற்று, தங்களது போராட்டத்தைப் பதிவு செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் நோக்கி மருத்துவர்கள் பேரணியாகப் புறப்பட்ட போது, அவர்களது போராட்டத்தைத் தடுத்துநிறுத்தும் வகையில், காவலர்கள் மருத்துவர்கள் இழுத்தும், தள்ளிக்கொண்டும் சென்று கைது செய்தனர்.
இதையும் படிக்க.. கரோனா தடுப்பூசி, பேரிடரை வெல்லும் பேராயுதமானது எப்படி?
சுமார் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு ராஜேந்திர நகர் காவல்நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக 2,500 மருத்துவர்கள் கைதாகியுள்ளனர். அனைவரும் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் போராட்டம் தொடரும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை, காவல்துறையினர் நடத்திய விதம் குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட பல மருத்துவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். காவல்துறை நடவடிக்கையின் போது, பல மருத்துவர்கள் தங்களது செல்லிடப்பேசிகளை தொலைத்துவிட்டதாகவும் கூறுகிறார்கள்.
பெண் மருத்துவர்களைக் கூட, காவலர்கள் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றதாகவும், இதனை அருகிலிருந்த மருத்துவர்கள் படம்பிடித்தபோது, காவலர்கள் செல்லிடப்பேசியை பிடுங்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
புது தில்லி முழுவதும், ஏராளமான மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிப்பது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சில மருத்துவனைகளில் புறநோயாளிகள் பிரிவு பூட்டப்பட்டுள்ளது.