உத்தரப் பிரதேசம் : குறையத் தொடங்கியது புதிய கரோனா பாதிப்புகள்
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்திருக்கிறது.
நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தினமும் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 70 ஆக குறைந்திருக்கிறது.
மாநிலத்தின் நோய்த் தொற்றுக்கு இதுவரை 17,07,953 பேர் பாதிப்படைந்ததாகவும் அவர்களில் 16,84,123 பேர் தொற்றிலிருந்து மீண்டதாகவும் 41 மாவட்டங்களில் புதிதாக எவருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்படவில்லை என்றும் 30 மாவட்டங்களில் ஒன்றைப்படையில் தான் நோய்த் தொற்றுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று ( செவ்வாய் கிழமை) தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களில் பிரயாக்ராஜ் ( 11 பேர் ) மற்றும் கவுதம புத்தா நகரில் (8 பேர் ) பகுதிகளில் தான் அதிகம் எனவும் தற்போது மாநிலத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,100 ஆக இருப்பதால் கரோனா கட்டுப்பாட்டில் வந்திருக்கிறது எனத் தெரிவித்தனர்.
மேலும் 7 மாவட்டங்கள் முற்றிலும் கரோனா இல்லாத மாவட்டங்களாகவும் அறிவிக்கப்பட்டது.