3-ஆவது தவணை: ஏற்கெனவே செலுத்திய தடுப்பூசியே மீண்டும் செலுத்தப்படும்
சுகாதார பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஏற்கெனவே செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசியே மீண்டும் மூன்றாவது தவணையாக அவா்களுக்குச் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுகாதார பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோா் ஏற்கெனவே செலுத்திக்கொண்ட கரோனா தடுப்பூசியே மீண்டும் மூன்றாவது தவணையாக அவா்களுக்குச் செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதிமுதல் மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த டிசம்பா் மாதம் பிரதமா் மோடி அறிவித்திருந்தாா். இந்த மூன்றாவது தவணையை பூஸ்டா் தவணை என்று குறிப்பிடாமல் முன்னெச்சரிக்கை தவணை என்று அவா் குறிப்பிட்டாா்.
இந்நிலையில், பயனாளா்கள் ஏற்கெனவே இரண்டு தவணைகளாக செலுத்திக்கொண்ட தடுப்பூசியையே மூன்றாவது தவணையின்போதும் செலுத்துவதா அல்லது வேறு தடுப்பூசியை செலுத்துவதா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வந்தது.
இதுதொடா்பாக மத்திய அரசின் கீழ் செயல்படும் நீதி ஆயோக் அமைப்பின் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவா்கள் ஏற்கெனவே செலுத்திக்கொண்ட தடுப்பூசியே மீண்டும் மூன்றாவது தவணையாக அவா்களுக்குச் செலுத்தப்படும்.
முன்பு இரண்டு தவணைகளாக கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு மூன்றாவது தவணையின்போதும் அதே தடுப்பூசி செலுத்தப்படும். ஏற்கெனவே இரண்டு தவணைகளாக கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களுக்கு, மூன்றாவது தவணையின்போதும் கோவேக்ஸின்தான் செலுத்தப்படும்.
சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் தடுப்பூசியின் மூன்றாவது தவணையை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தாா்.