இந்தியா

'ஜுஹார்' எனக் கூறி உரையைத் தொடங்கிய முர்மு: கொண்டாடிய ஒடிசா மக்கள்

DIN

புவனேஸ்வரம்: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரௌபதி முா்மு இன்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரௌபதி முர்மு, ஜுஹார் என்று ஒடியா மொழியில் வணக்கம் சொல்லி தனது உரையைத் தொடங்கினார்.

தங்கள் மண்ணின் மகள் ஒருவர், நாட்டின் முதல் குடிமகனாக பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதை ஒடிசா மாநிலம் முழுவதும் குறிப்பாக, முர்முவின் சொந்த கிராமமான உபர்பேடா, அவரது மறைந்த கணவர் ஷியாம் சரன் முர்முவின் சொந்த கிராமமான பஹாட்பூர், அவர் வாழ்ந்து வந்த ரெய்ரங்பூர், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரம் என மாநிலத்தின் பல பகுதிகள் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. மக்கள் சாலைகளில் ஆடியும் பாடியும் கொண்டாடி வருகிறார்கள்.

இன்று காலை குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது. திரௌபதி முா்முவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடா்ந்து 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னா் திரௌபதி முா்மு, நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது, ஜுஹார் என்று ஒடியா மொழியில் வணக்கம் எனக் கூறி உரையைத் தொடங்கினார். இப்படித்தான் ஒடிசாவில் கிராம மக்கள் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் கைகளைக் கட்டிக் கொண்டு வணக்கம் தெரிவித்துக் கொள்வார்கள். இதனை ஊடகங்கள் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த ஒடிசா மக்கள் உணர்ச்சிப்பெருக்கால் குதூகலித்தனர். ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவர் மாளிகையில், நாட்டின் முதல் குடிமகனாக இருப்பதும், குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு ஆற்றிய முதல் உரையில், ஒடியா மொழியில் ஜுஹார் என்று வணக்கம் கூறி உரையைத் தொடங்கியிருப்பதும் எங்கள் பாக்கியம் என்று கிராம மக்கள் தங்கள் வெற்றிக் கொண்டாட்டத்தை இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.

நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான எம்.வெங்கைய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள், ஆளுநா்கள், மாநில முதல்வா்கள், முப்படை தலைமை தளபதிகள்-மூத்த தளபதிகள், பிற துறை தலைவா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முர்முவின் உறவினர்கள், மகள் மற்றும் மருமகன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூறைக்காற்றால் மின்கம்பிகள் துண்டிப்பு: மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதி

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

SCROLL FOR NEXT