தெலங்கானாவில் அமலாக்கத் துறைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தின்போது காவலரை தாக்க முயன்ற அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரேணுகா சௌத்ரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பாக நேற்று(ஜுன்-15) மூன்றாவது நாளாக விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தில்லியிலுள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்திற்கு முன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கே.சி.வேணுகோபால், பூபேஷ் பாகெல் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத் துறையைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ரேணுகா சௌத்ரி தடுப்புப் பணியிலிருந்த காவலர் ஒருவரின் சட்டையைப் பிடித்து ஆவேசமாகப் பேசினார்.
இதனை, சமூக வலைதளத்தில் பலரும் கண்டித்து வரும் வேளையில் ரேணுகா சௌத்ரி மற்றும் தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 151, 140, 147, 149, 341, 353 (பொது ஊழியரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்க தாக்குதல் நடத்தியது) கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இருப்பினும், ரேணுகா சௌத்ரி “நான் தாக்க முற்படவில்லை. கூட்டத்தில் சமநிலையை இழந்ததால் கீழே விழாமல் இருக்க அவரை(காவலரை) பிடித்துக்கொண்டேன். இதற்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.