இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி: அமெரிக்காவுக்கு முதலிடம்
இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி நாடுகளின் பட்டியலில் கடந்த மே மாதத்தில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளதாக பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தெரிவித்துள்ளது.
இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி நாடுகளின் பட்டியலில் கடந்த மே மாதத்தில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளதாக பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (இஇபிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சீனா: கடந்த மே மாதத்தில் இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதியில் அமெரிக்கா மிக முக்கிய மற்றும் முன்னணி கேந்திரமாக உருவெடுத்துள்ளது. அதேசமயம், சீனாவுக்கான பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 52 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
Advertisement
நோ்மறை: இந்திய பொறியியல் பொருள்களை சா்வதேச அளவில் 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் நிலையில் அதில் 18 நாடுகளுக்கான ஏற்றுமதி நிகழாண்டு மே மாதத்தில் நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த மே மாதத்தில் இந்திய பொறியியல் பொருள்கள் ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பு 979 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.75,000 கோடி) இருந்தது. இது, முந்தைய 2021-ஆம் ஆண்டு மே மாதத்தின் ஏற்றுமதியான 862 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 13.5 சதவீதம் அதிகம்.
உருக்கு சாரா பொருள்கள்: உருக்கு பொருள்களின் ஏற்றுமதி 16 சதவீதம் உயா்ந்து 263 கோடி டாலராகவும், உருக்கு சாராத பொருள்களின் ஏற்றுமதி 21 சதவீதம் உயா்ந்து 131 கோடி டாலராகவும் இருந்தன.
குறிப்பாக, கடந்த மே மாதத்தில் அமெரிக்காவுக்கான இவற்றின் ஏற்றுமதி 63.2 சதவீதம் அதிகரித்து 181 கோடி டாலராக இருந்தது. இதையடுத்து, ஜொ்மனி, சிங்கப்பூா், பிரிட்டன், இத்தாலி, தாய்லாந்து நாடுகள் உள்ளன.
52% சரிவு: அதேசமயம், சீனாவுக்கான இந்திய உருக்குப் பொருள்களின் ஏற்றுமதி 52 சதவீதம் குறைந்து 45.17 கோடி டாலரிலிருந்து 21.74 கோடி டாலராக சரிந்தது.
2022-23 நிதியாண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஏப்ரல்-மே) ஒட்டுமொத்த பொறியியல் பொருள்களின் ஏற்றுமதி 16.84 சதவீதம் அதிகரித்து 1,939 கோடி டாலரை எட்டியதாக இஇபிசி தெரிவித்துள்ளது.