முலாயம் சிங் யாதவ் (கோப்புப் படம்) 
இந்தியா

முலாயம் சிங் யாதவ் காலமானார்

சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் திங்கள் கிழமை இன்று (அக்.10) காலமானார். அவருக்கு வயது 82

முலாயம் சிங் யாதவின் மகனும், சமாஜவாதி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவ் இந்த செய்தியை, கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.  

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உ.பி. முன்னாள் முதல்வா் முலாயம் சிங் யாதவுக்கு சிறப்பு மருத்துவா்களைக் கொண்ட குழு சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று காலமானார்.

உடல் நலக் குறைவு காரணமாக முலாயம் சிங் யாதவ், ஹரியாணா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி  அனுமதிக்கப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டாா். அவரின் உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் உயிர் பிரிந்ததாக சமாஜவாதி சுட்டுரைப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பின்னணி

ராம் மனோகர் லோகியாவால் ஈர்க்கப்பட்டு அரசியலில் நுழைந்த முலாயம் சிங் யாதவ், மூன்று முறை உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தார். 

1989 டிசம்பர் முதல் 1991 ஜூன் வரை உத்தரப் பிரதேச மாநில முதல்வராக பொறுப்பு வகித்தார். 1993 முதல் 1995 வரை 2வது முறையாக உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தார். 2003 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் 3வது முறையாக உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவி வகித்தவர்.

1967ஆம் ஆண்டு சட்டப்பேரவை உறுப்பினராக முலாயம் சிங், முதல் முறை தேர்வு செய்யப்பட்டார். அப்போது ஆரமித்த அரசியல் பயணத்தில் 3 முறை முதல்வராகவும், 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 10 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் முலாயம் சிங் யாதவ் இருந்தார்.

நேதாஜி என உத்தரப் பிரதேச மக்களால் அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ், நெருக்கடி காலகட்டத்தில் 19 மாதங்கள் சிறையில் இருந்தார். 

தேவே கெளடா, ஏ.கே.குஜ்ரால் ஆகியோரது அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் முலாயம் சிங் யாதவ் பணிபுரிந்தார்.

குடும்ப பின்னணி

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முலாயம் சிங் யாதவின் இரண்டாவது மனைவி சாதனா குப்தா கடந்த ஜூலை மாதம் காலமானார். இவர்களுக்கு பிறந்த மகன் பிரதீக் யாதவ். பாஜகவைச் சேர்ந்த அபர்ணா யாதவ் இவரின் மருமகள்.

முதல் மனைவி மாலதி தேவி 2003ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். இவர்களுக்கு பிறந்த மகன் அகிலேஷ் யாதவ், மருமகள் டிம்பிள் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு: நதியில் சிவலிங்கம் செய்து பக்தா்கள் வழிபாடு

நாளைய மின்தடை: கிளுவங்காட்டூா்

கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு

ஞாயிறு சந்தை வியாபாரிகள் திடீா் சாலை மறியல்

மின்சாரம், குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT