இந்தியா

நாட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு; மோடி பதவி விலக வேண்டும்: திருமாவளவன் அதிரடி பேச்சு!

DIN

மணிப்பூர் சம்பவங்கள் நாட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு என்றும் ஒட்டுமொத்த நாடுமே பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை இழந்து நிற்கிறது என்றும்  விசிக எம்.பி. தொல். திருமாவளவன் பேசினார். 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் மக்களவையில் இன்று(செவ்வாய்கிழமை) பேசினார்.

அவர் பேசியதாவது: 

மணிப்பூரில் குகி, மைதேயி ஆகிய இரு சமூகத்தினரிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இரு தரப்பு பெண்களும் பாதிக்கப்பட்டுளள்ளனர். மாநில அரசு மட்டுமின்றி மத்திய அரசின் மீதும் நம்பிக்கையற்று இருக்கிறோம் என அந்த மக்கள் கூறுகிறார்கள். கடந்த 90 நாள்களாக எங்களுக்கு என்ன நேர்ந்திருக்கிறது என்று பிரதமர் வாய் திறக்கவே இல்லை, கண்டிக்கவே இல்லை. முதல்வர் எங்களை சந்திக்கவில்லை, ஆறுதல் கூறவில்லை என வேதனையைப் பகிர்ந்துள்ளனர். 

மணிப்பூர் மக்களை போன்று எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் மீது நம்பிக்கையை இழந்து நிற்கிறோம். மணிப்பூரில் 150 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 'இந்த நாட்டைக் காப்பாற்ற முடிந்த என்னால் என் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், முன்னாள் ராணுவ வீரர் கூறியிருப்பது உண்மையில் நாட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவு.

பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 60,000 மக்கள் நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சொந்த நாட்டிலேயே மணிப்பூர் மக்கள், அகதிகளாக நிற்கும் நிலை இந்த அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கிறது. 

பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தி மிக கேவலமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளதற்கு இந்த அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், பிரதமர் ஒரு வரியில் சொல்லிவிட்டு தன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறார். 

மணிப்பூர் அரசிடம் இருந்த ஆயுதங்கள் மைதேயி மக்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசே கூறுகிறது. 

மணிப்பூர் குறித்து குடியரசுத் தலைவரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. இன்றைக்கும் மணிப்பூரில் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியவில்லை. மணிப்பூர் மட்டுமல்ல, ஹரியாணாவிலே இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை நடக்கிறது. சிறுபான்மையினரை அழித்து ஒழிப்போம் என இந்துத்துவ அமைப்பினர் கூறும் அவலம் நடக்கிறது. 

ஜெய்ப்பூரில் ரயிலில் காவலர் ஒருவர், இஸ்லாமியர்களை தேடித் தேடிச் சென்று சுட்டுக் கொன்றுள்ளார். அவர், பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும்  கூறியுள்ளார். 

நாட்டில் சிறுபான்மைகள், தலித்துகள், பழங்குடிகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஒட்டுமொத்த நாடே பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்து நிற்கிறது. ஏன், இந்து பெரும்பான்மை மக்களுக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லை. 

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 12 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு விலை, தக்காளி விலை உயர்வால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மை இந்து மக்கள்தான். 

கர்நாடகத்தில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்கள்தான் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸை ஆட்சியில் அமர வைத்துள்ளனர். எஸ்.சி, எஸ்.டி., ஓ.பி.சி. மக்களுக்கான இடஒதுக்கீடு நிரப்பப்படவில்லை. சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. 

இதற்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி விலக வேண்டும்' என்று பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

என்ன பார்வை?

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்!

SCROLL FOR NEXT