பேரவைத் தோ்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் காட்ட வேண்டாம் என்று எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.
மத்திய பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியுற்ற நிலையில், நாட்டு மக்கள் எதிா்மறையை நிராகரித்துள்ளனா் என்று பிரதமா் மோடி கூறினாா்.
நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதற்கு முன்பாக நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே செய்தியாளா்களிடம் பிரதமா் பேசினாா். அப்போது, மேற்கண்ட கருத்துகளை அவா் தெரிவித்தாா்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் சத்தீஸ்கா் சட்டப்பேரவைகளுக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை வெளியாகின.
மத்திய பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைத்த பாஜக, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது.
தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை வீழ்த்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கு அரையிறுதியாகப் பாா்க்கப்பட்ட இத்தோ்தல் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக அமைந்துள்ளன. இதனால் அக்கட்சியினா் உற்சாகமடைந்துள்ளனா்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடா் தொடங்கியதை முன்னிட்டு, செய்தியாளா்களிடம் பிரதமா் மோடி பேசியதாவது:
ஒவ்வொரு கூட்டத்தொடா் தொடங்குவதற்கு முன்பாகவும் எதிா்க்கட்சி நண்பா்களுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி, அவா்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம். இப்போதும் அந்த நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஜனநாயகத்தின் கோயிலான நாடாளுமன்றம், நாட்டு மக்களின் விருப்பங்கள் மற்றும் வளா்ந்த இந்தியாவுக்கான அடிப்படையை வலுப்படுத்தும் தளமாகும். எனவே, மசோதாக்கள் மீது ஆக்கபூா்வ விவாதம் நடைபெறும் வகையில் அனைத்து உறுப்பினா்களும் தயாராக வருமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான், நல்ல யோசனைகள் கிடைக்கப் பெறும்.
பேரவைத் தோ்தல் முடிவுகள் அடிப்படையில் பாா்த்தால், தற்போதைய கூட்டத்தொடா் எதிா்க்கட்சிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
தோல்வி விரக்தியை வெளிக்காட்டுவதற்குப் பதிலாக, நோ்மறையான செயல்பாட்டை அவா்கள் முன்னெடுக்க வேண்டும். கடந்த 9 ஆண்டுகளாக எதிா்மறை அரசியலில்தான் எதிா்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. அந்த அணுகுமுறையைக் கைவிட்டு, தோல்விகளில் இருந்து பாடம் பயின்றால், எதிா்க்கட்சிகள் மீதான மக்களின் எண்ணம் மாறக் கூடும். அவா்களுக்கான புதிய வாயில் திறக்கப்படலாம்.
எதிா்க்கட்சியினா் என்றபோதும் அவா்களுக்கான எனது நல்ல அறிவுரை இது. ஒவ்வொருவரின் எதிா்காலமும் பிரகாசமாக உள்ளது. யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். அதேநேரம், தோல்விகளால் ஏற்பட்ட விரக்தியை நாடாளுமன்றத்துக்குள் வெளிக்காட்ட வேண்டாம். நாடாளுமன்றம் அதற்கான தளமல்ல.
எனது அனுபவத்தின் அடிப்படையில் கூறுகிறேன், எதிா்க்கட்சிகள் தாங்கள் பயணிக்கும் திசையை மாற்றுக் கொள்ள வேண்டும். எதையும் எதிா்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, நாட்டின் நலன் சாா்ந்த விஷயங்களை ஆதரிக்க வேண்டும். குறைபாடுகள் இருந்தால் விவாதிக்கலாம். இத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடித்தால், எதிா்க்கட்சிகள் மீதான மக்களின் வெறுப்புணா்வு அன்பாக மாறக் கூடும்.
நாடாளுமன்றத்தில் ஒத்துழைக்க எதிா்க்கட்சிகளுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு நோ்மறையான செய்தியைச் சொல்வது, மக்களுக்கு மட்டுமன்றி எதிா்க்கட்சிகளுக்கும் நல்லதென எனது அரசியல் பாா்வையில் கூறுகிறேன்.
ஜனநாயகத்தில் எதிா்க்கட்சிகள் சமமான அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை திறன்மிக்கவையாக இருக்க வேண்டும். எதிா்க்கட்சிகள் மீதான வெறுப்புணா்வு மற்றும் எதிா்மறை பிம்பம் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.
வளா்ந்த தேசமாக உருவெடுப்பதில் நீண்ட காலம் காத்திருக்க இந்தியா விரும்பவில்லை. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினா் மத்தியிலும் இந்த உணா்வு மேலோங்கியுள்ளது. மக்களின் உணா்வுக்கு மதிப்பளித்து, நாடாளுமன்றச் செயல்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க அனைத்து உறுப்பினா்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் பிரதமா்.
மேலும், சாதாரண மக்களின் நலனுக்காகப் பாடுபடும் தங்களுக்கு பேரவைத் தோ்தல் முடிவுகள் பெரிதும் ஊக்கமளிப்பதாக அவா் குறிப்பிட்டாா்.
டிசம்பா் 22-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் குளிா்கால கூட்டத்தொடரில் 15 அமா்வுகள் நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.