தில்லியில் பாஜக கூட்டணி கூட்டம் தொடங்கியது
பெங்களூருவில், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், புது தில்லியில் பாஜக கூட்டணி கூட்டம் தொடங்கியது.
பெங்களூருவில், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்த கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், புது தில்லியில் பாஜக கூட்டணி கூட்டம் தொடங்கியது.
பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம், தில்லியில் இன்று மாலை 5.30 மணியளவில் தொடங்கியது. இதில் 39 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிக்க.. ஆயுதப்படை மாற்றம்தான் அதிகபட்ச தண்டனையா? உயிரின் விலை என்ன?
பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடியும் பங்கேற்றுள்ளார். பிரதமா் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி, 2019-இல் 2-ஆவது முறையாக ஆட்சியமைத்த பிறகு நடைபெறும் அக்கூட்டணியின் முதல் கூட்டம் இதுவாகும்.
2024 மக்களவைத் தோ்தலுக்கு ஆளும்தரப்பும் எதிா்தரப்பும் ஆயத்தமாகி வரும் நிலையில், பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில், ஆளும் கூட்டணி பலத்தை பிரதிபலிப்பதாக இக்கூட்டம் அமைந்துள்ளது.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் எதிா்க்கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்த, அதே நாளில் பாஜக கூட்டணிக் கூட்டமும் நடைபெறுவது அரசியல் அரங்கில் எதிா்பாா்ப்பை அதிகரித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தில் 39 கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்றுள்ளனர். அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதில் பெரும்பான்மை பலத்துடன் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெல்லும் முனைப்பில் பாஜக தீவிரமாக பணியாற்றத் தொடங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் இணைக்கவும், புதிய கட்சிகளை வரவேற்கவும் பாஜக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிா்தரப்பை வலுவிழக்கச் செய்யும் வியூகங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி, ஓம் பிரகாஷ் ராஜ்பா் தலைமையிலான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஜிதன்ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சி ஆகிய கட்சிகளுடன் பாஜக கைகோத்துள்ளது.
புதிய வரவாக வந்துள்ள கட்சிகளுக்கும், அதிமுக (தமிழகம்), ஜனசேனா (ஆந்திரம்) மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சோ்ந்த பல்வேறு பிராந்திய கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.