முகப்பு
இந்தியா

இந்தியா கூட்டணிக்கு எதிராக பாஜகவினர் கையிலெடுக்கும் ஆயுதம்.. பாரதம்

ஒரே நாளில் பாஜக தலைமையிலான தேஜகூ மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக் கூட்டமும் நடந்து முடிந்துள்ளது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:03 PM
இந்தியா - புதிய இந்தியா
பகிர்:

புது தில்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ஒரே நாளில் பாஜக தலைமையிலான தேஜகூ மற்றும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக் கூட்டமும் நடந்து முடிந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிக்கு இந்திய தேசிய ஜனநாயக சக்திகளை உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) என பெயரிடப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளதால், அவர்களது பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாரதம் என்ற வார்த்தையை பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் கையிலெடுத்துள்ளனர்.

மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ள, எதிா்க்கட்சிகளின் புதிய கூட்டணிக்கு ‘இந்திய தேசிய உள்ளடக்கிய வளா்ச்சி கூட்டணி’  என்ற புதிய பெயா் சூட்டப்பட்டுள்ளது. பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 26 அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தோ்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிா்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க, 26 அரசியல் கட்சிகள் பங்கேற்ற எதிா்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், கடந்த 2 நாள்களாக பெங்களூரில் ‘தாஜ்வெஸ்ட் எண்ட்’ நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தலைமை வகித்தாா்.

பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த அதே நேரத்தில் தில்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) கட்சிகளின் கூட்டம் தொடங்கியது. 

என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் 25 ஆண்டுகள் நிறைவு விழா கூட்டத்தில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, ‘என்டிஏ’ தான் புதிய இந்தியா (என்), வளா்ச்சியடைந்த தேசம் (டி), மக்கள், பிராந்தியங்களின் விருப்பம் (ஏ) என்று புதிய விளக்கத்தை அளித்தாா்.

எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிடப்பட்ட சில மணி நேரங்களில் நடைபெற்ற என்டிஏ கூட்டணிக்கு பிரதமா் மோடி புதிய விளக்கத்தை அறிவித்தாா்.

இந்த நிலையில், இன்று காலை முதல், சமூக வலைத்தளங்களில் பாஜகவினரால் பாரதம் என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அசாம் முதல்வர் ஹிமந்த் பிஸ்வா ஷர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், நமது நாடு நாகரீகம் அடையும் காலத்தில் இருந்தே இந்தியா மற்றும் பாரதத்துக்கு இடையே மோதல் இருக்கிறது. நமது நாட்டுக்கு பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா என பெயரிட்டனர். ஆனால், நாம் காலனிய ஆதிக்க மரபிலிருந்து விடுபட வேண்டும். நாம் தொடர்ந்து பாரதத்திற்காக உழைப்போம். பாரதத்திற்காக பாஜக என்று பதிவிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாரதம் என இரண்டு பெயர்களுக்கும் ஆதரவாகவும் விமரிசித்தும் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள் மக்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →