பொய்யான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளக் கூறி மணிஷ் சிசோடியாவை சிபிஐ சித்ரவதை செய்கிறது: ஆம் ஆத்மி
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளக் கூறி தொந்தரவு.
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளக் கூறி சித்ரவதை செய்வதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
சிபிஐ அதிகாரிகள் பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கியத் தாள்களில் மணீஷ் சிசோடியாவை கையெழுத்திட அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாள் (மார்ச் 4 வரை) சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
மணீஷ் சிசோடியாவுக்கு பிறப்பித்த சிபிஐ காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் மேலும் 3 நாள்கள் காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், மேலும் 2 நாள்கள் காவலை நீட்டித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் பொய்யான குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளக் கூறி சித்ரவதை செய்வதாக ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆம் ஆத்மியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் பேசியதாவது: மணீஷ் சிசோடியா சிபிஐ அதிகாரிகளால் துன்புறுத்தப்படுகிறார். பொய்யான குற்றச்சாட்டுகள் அடங்கியத் தாள்களில் கையெழுத்திடக் கூறி சிபிஐ அதிகாரிகள் அவருக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக சிபிஐ அதிகாரிகளிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவர்கள் எந்த ஒரு ஆதாரமும் தொலைந்துவிட்டதாக ஒருபோதும் தெரிவிக்கவில்லை. மணீஷ் சிசோடியாவின் இல்லத்தில் சோதனையிட்டதில் அவர்களுக்கு எந்த ஒரு ஆதரமும் கிடைக்கவில்லை என்றார்.