வசுந்தரா ராஜேதான் அசோக் கெலாட்டின் தலைவர்: சச்சின் பைலட் தாக்கு
பாஜக தலைவர் வசுந்தரா ராஜேதான் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் தலைவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார்.
பாஜக தலைவர் வசுந்தரா ராஜேதான் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் தலைவர் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் விமர்சித்துள்ளார்.
ராஜஸ்தானில் கடந்த 2020, ஜூலையில் முதல்வா் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக, அப்போது துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றும் 18 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தினா்.
சுமாா் ஒரு மாதம் நீடித்த இந்த அரசியல் குழப்பம், கட்சி மேலிடத்தின் தலையீட்டை அடுத்து முடிவுக்கு வந்தது. துணை முதல்வா் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவா் பதவிகளில் இருந்து பைலட் நீக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து, இருவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
வசுந்தரா ராஜே தலைமையிலான முந்தைய பாஜக அரசின் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கெலாட் அரசை பைலட் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.
இந்நிலையில், டோல்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கெலாட் பங்கேற்றுப் பேசுகையில், கடந்த 2020-இல் மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, கஜேந்திர சிங் ஷெகாவத், தா்மேந்திர பிரதான் ஆகியோா் எனது அரசை கவிழ்க்க சதி செய்தபோது, முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, முன்னாள் பேரவைத் தலைவா் கைலாஷ் மேக்வால் மற்றும் பாஜக எம்எல்ஏ ஷோபாராணி குஷ்வா ஆகியோா் அதனை ஆதரவளிக்கவில்லை. அவா்களது உதவியால்தான், எனது அரசு காப்பாற்றப்பட்டது என்றாா்.
இதனைத் தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட் பேசுகையில்,
டோல்பூரில் அசோக் கெலாட் பேசியதை கேட்டபோது, அவரது தலைவர் சோனியா காந்தி அல்ல, வசுந்தர ராஜே எனத் தோன்றுகிறது. முதல்முறையாக சொந்த கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விமர்சித்துவிட்டு, பாஜக தலைவர்களை பாராட்டுவதை காண்கிறேன்.
முந்தைய பாஜக ஆட்சியின் ஊழல் குறித்து அசோக் கெலாட் ஏன் விசாரிக்கவில்லை என்று தற்போது புரிகிறது எனத் தெரிவித்தார்.
மேலும், ஊழலுக்கு எதிராக அஜ்மெரில் இருந்து ஜெய்பூர் வரை 5 நாள்கள் நடைப்பயணத்தை மே 11-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக சச்சின் பைலட் அறிவித்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள், ராஜஸ்தான் காங்கிரஸில் மீண்டும் உள்கட்சி பிரச்னை வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.