திருப்பதி கோயிலுக்குள் விடியோ எடுத்தது எப்படி? கேள்விக்குள்ளான பாதுகாப்பு
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கருவறைக்கு வெளியே இருக்கும் பிரகாரத்தை பக்தர் ஒருவர் விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலின் கருவறைக்கு வெளியே இருக்கும் பிரகாரத்தை பக்தர் ஒருவர் விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோயிலுக்குள் நுழைந்த பக்தர் ஒருவர் எவ்வாறு தனது கையில் காமிராவைக் கொண்ட செல்லிடைப்பேசியை எடுத்துச் சென்றார் என்றும், கோவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எவ்வாறு அலட்சியமாக இருந்துள்ளனர் என்றும் பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திருப்பதி கோயிலுக்குள் பாதுகாப்புக் கருதி செல்லிடப்பேசிகள் உள்பட எந்த மின்னணு சாதனத்தையும் கொண்டு செல்ல அனுமதி கிடையாது. வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திலிருந்து இரண்டு கட்ட சோதனைகளுக்குப் பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். சோதனைக் கருவிகளும் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறிருக்க, பக்தர் ஒருவர் ஏழுமலையான் கோவிலுக்குள் தன்னுடைய செல்லிடைப்பேசியைக் கொண்டு சென்று ஆனந்த நிலையம் மற்றும் கருவறைக்குச் செல்லும் வழி உள்ளிட்டவற்றை விடியோ பதிவு செய்துள்ளார்.
ஆனந்த நிலையமானது, தங்க பட்டைகளால் அலங்கரிக்கப்பட்டு கோயில் முழுவதும் மின்னுகிறது.
இந்த விடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலான பிறகு, இப்படி ஒரு சம்பவம் நடந்ததே திருப்பதி திருமலை கோயில் நிர்வாகத்துக்குத் தெரிய வந்துள்ளது. உடனடியாக கோயில் பாதுகாப்பு அமைப்புகளின் பாதுகாப்புக் குறைபாடுகள் தொடர்பாக விசாரணைத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விடியோவைப் பதிவு செய்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு, விடியோ எடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோயில் நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோயிலுக்குள் இருக்கும் சிசிடிவி கேமராப் பதிவுகளும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டு, விடியோ எடுத்த நபரின் அடையாளத்தைக் காணும் பணிகள் தொடங்கியுள்ளன.
கடந்த ஞாயிறன்று, திருமலை திருப்பதி கோயிலில் கனமழை பெய்ததாகவும், அப்போது இரண்டு மணி நேரம் மின்தடை ஏற்பட்டிருந்த நேரத்தை இந்த பக்தர் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.