தேர்தல் அறிக்கை கீதை, குரான் போன்றது: மல்லிகார்ஜூன கார்கே
தெலங்கானா தேர்தலையொட்டி காங்கிரஸின் தேர்தலறிக்கையை வெளியிட்டார் மல்லிகார்ஜுன கார்கே.
காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தெலங்கானா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று (நவ.17) வெளியிட்டார்.
42 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு இலவச இணைய வசதி, மாதம் 4000 ரூபாய் சமூக ஓய்வுதியம் வழங்கும் திட்டம் உள்பட அதில் ஆறு வாக்குறுதிகள் மற்றும் ஏராளமான பிரகடனங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆறு வாக்குறுதிகளில் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய், 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர், 200 யூனிட் இலவச மின்சாரம், இலவச பேருந்து பயணம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் நில அளவை திட்டமான தரணி திட்டம் நீக்கப்பட்டுப் புதிய திட்டம் கொண்டுவரப்படும் என்றும் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 15,000 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டமும் விவசாயத் தொழிலாளர்களுக்கு 12,000 ரூபாய் வழங்கும் திட்டமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 லட்சத்துக்கான மருத்துவ காப்பீடு, மாணவர்களின் கல்வி கட்டணத்திற்கான 5 லட்சம் ரூபாய்க்கு நிதியுதவி அட்டை, இலவச இணைய வசதி ஆகியவை அந்த ஆறு வாக்குறுதிகளில் அடங்கும்.
இதையும் படிக்க: சத்தீஸ்கர், ம.பி. தேர்தல்: பிற்பகல் 3 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
இதனை வெளியிட்டுப் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “எங்களுக்கு தேர்தலறிக்கை என்பது பகவத் கீதை, பைபிள், குரான் போன்றது. ஆட்சிக்கு வந்த முதல் பேரவை கூட்டத்திலேயே ஆறு வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நவ.30 அன்று தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. பதிவான வாக்குகள் கணக்கெடுப்பட்டு தேர்தல் முடிவுகள் டிச.3 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.