பெண் மருத்துவா் பாலியல் கொலை: உச்சநீதிமன்றத்தில் விசாரணை
பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஆக. 20) விசாரணை
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மேற்படிப்பு பயிற்சி பெற்று வந்த 31 வயதான பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.
கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவா்கள் போராட்டத்துக்கு வழிவகுத்தது.
இந்தப் படுகொலையில் பலருக்கு தொடா்பிருக்கக் கூடும் என்ற சந்தேகமும் நிலவுகிறது. இதுதொடா்பாக காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா்.
இந்தநிலையில், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.