ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் மற்றும் ஜம்மு- காஷ்மீர் காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள், இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் காந்தி பேசியதாவது, ``மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒரு விஷயம் மாறிவிட்டது; அதாவது, பிரதமர் நரேந்திர மோடியின் நம்பிக்கையை காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி உலுக்கியுள்ளது. அதை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கக் கூடும்.
அவரது தன்னம்பிக்கையையும், உளவியலையும் நாங்கள் உடைத்துள்ளோம். காங்கிரஸின் சித்தாந்தம் மற்றும் அன்பு, ஒற்றுமை, மரியாதை ஆகியவற்றில் இந்தியா கூட்டணி கவனம் செலுத்தியதால்தான், மோடி தோற்கடிக்கப்பட்டார்.
நாங்கள் எந்த வன்முறையையும் நாடவில்லை; அவதூறான வார்த்தைகளையும் பயன்படுத்தவில்லை. நீங்கள் நினைப்பதுபோல் நீங்கள் இல்லை என்று மோடியிடம் நாங்கள் தெளிவாகக் கூறினோம்’’ என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ``பொய்களில் தேர்ந்தவர்தான் மோடி. நீங்கள் அவரை நம்பினால், நீங்கள் முடிவுக்கு வந்து விடுவீர்கள். ஏதோவொரு கட்சியால் நாட்டைக் காப்பாற்ற முடியுமானால், அது காங்கிரஸ் கட்சி மட்டுமே.
ஜம்மு-காஷ்மீரில் 2,350 பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் 377 பொதுமக்கள் இறந்துள்ளனர். வரவிருக்கும் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் 40 முதல் 45 இடங்களை வெல்லும்.
மேலும், ஜம்மு-காஷ்மீரின் நிலம், காடுகள் போன்றவற்றைப் பாதுகாக்க காங்கிரஸ் செயல்படும்’’ என்று உரையாற்றினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு வருகிற செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.