தெலங்கானாவில் நில அதிர்வு!
தெலங்கானாவில் காலை 7.27 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது.
தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் காலை 7.27 மணியளவில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. தெலங்கானாவில் ஏற்பட்ட நில அதிர்வு ஹைதராபாத்திலும் உணரப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் உயிர்சேதமோ அல்லது பொருள்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்கவும், நில அதிர்வின் போது நெரிசலான, பாதுகாப்பற்ற கட்டடங்களில் இருந்து தொலைவில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்று நவம்பர் 30 ஆம் தேதி அஸ்ஸாமின் கர்பி அங்லாங் பகுதியில் 2.9 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டது. நில அதிர்வு அதிகாலை 2.40 மணியளவில் பதிவாகியிருந்தது.
அதற்கு 2 நாள்கள் முன்னதாக, நவம்பர் 28 அன்று ஜம்மு காஷ்மீரில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆனால் உயிர் சேதம் அல்லது பொருள்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானில் 36.49 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், கிழக்கே 71.27 டிகிரி தீர்க்கரேகையிலும், 165 கி.மீ ஆழத்தில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.