பாகிஸ்தானில் வாக்கு எண்ணிக்கையின் போது துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின்போது அரசியல் கட்சிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
பலுசிஸ்தான் அவாமி கட்சி(பிஏபி) மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி(பிபிபி) ஆதரவாளர்கள் கராச்சியின் எல்லையில் உள்ள தொழில் நகரமான ஹப்பில் தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு வெளியே மோதிக்கொண்டனர்.
பிப்ரவரி 8 அன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிகாரப்பூர்வமற்ற முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பிஏபி முகமது சலே பூதானி வெற்றி பெற்றதாகக் கூறினார். ஆனால் பிபிபி அலிஹசன் செஹ்ரி முடிவை மாற்றுவதற்கு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு கோரினார்.
இதையடுத்து, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீண்டும் வாக்குகளை எண்ணும்படி உத்தரவிட்டுள்ளது.
39 வாக்குச் சாவடிகளில் வாக்குகள் முண்டும் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தபோது மோதல் ஏற்பட்டது. மேலும் இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.
பிபிபி ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதைத் தாமதப்படுத்தும் தந்திரம் என்று கூறப்படுகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த எல்லைப் படைகள் அழைக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த வாரம் பொதுத் தேர்தல்கள் நடந்து முடிந்த நாளிலிருந்து அமைதியின்மை நிலவுகிறது, குறைந்தபட்சம் நான்கு அரசியல் கட்சிகள் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து, குவெட்டாவிலும் மாகாணத்தின் பிற பகுதிகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.