நடுரோட்டில் சிவசேனை தலைவருக்கு வெட்டு; பட்டப்பகலில் துணிகரம்!
பஞ்சாபில் சிவசேனை தலைவரைத் தாக்கிய சீக்கியர்கள்
பஞ்சாபில் பட்டப்பகலில் சிவசேனை தலைவர் சந்தீப் தாப்பர், சீக்கியர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், பஞ்சாபில் சிவசேனை தலைவர் சந்தீப் தாப்பர் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார். அந்த கூட்டத்தில் சந்தீப் சீக்கியர்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாகத் தெரிவிக்கின்றனர். கூட்டத்தில் சந்தீப் கூறிய கருத்துகளால் சில சீக்கியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சந்தீப் கூட்டத்தை முடித்துக்கொண்டு, ஒரு பாதுகாவலருடன் ஸ்கூட்டரில் திரும்பிச் சென்றுள்ளார். அப்போது, சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிச் செல்லும்போது, மூன்று சீக்கியர்கள் அவர்களை வழிமறித்துள்ளனர். வழிமறித்தவர்கள் சந்தீப்பை தாக்கியுள்ளனர்; தடுக்க வந்த பாதுகாவலரையும் அவர்கள் சாலையின் ஓரத்திற்கு இழுத்துச் சென்றுள்ளனர். =
சந்தீப்பை மற்ற இருவரும், அவர்கள் கொண்டுவந்த வாள்போன்ற ஆயுதங்களால் தொடர்ந்து தாக்கியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த மக்கள் சீக்கியர்களின் தாக்குதலைத் தடுக்கவோ, சந்தீப்பைக் காப்பாற்றவோ முன்வராமல் இருந்தது தான் அதிர்ச்சியளிக்கிறது.
சிறிதுநேரத்தில் சந்தீப்பை தாக்கிய சீக்கியர்கள், சந்தீப் ஓட்டிவந்த ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ரத்தவெள்ளத்தில் கிடந்த சந்தீப் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தீப்பிற்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் குழு, சந்தீப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தீப்பை தாக்கிய மூன்று சீக்கியர்களில் இருவரைக் கைது செய்தும், மற்றும் சந்தீப்பின் ஸ்கூட்டரையும் மீட்டுள்ளனர்.
பஞ்சாபில் நடந்துள்ள இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலக்கட்சியான ஷிரோமணி அகாலி தளத்தின் தலைவர் ஹர்சிம்ரத் கவுர் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ``பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மண் தூக்கத்திலிருந்து எழுந்து, இதற்கான சரியான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்’’ என்று கருத்து பதிவிட்டுள்ளார்.
மத்திய இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு கூறுவதாவது, "பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு நகைச்சுவையாக உள்ளது. பஞ்சாபில் சட்டம் ஒழுங்கு என்று ஏதாவது இருக்கிறதா? என்று பக்வந்த் பதிலளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநில பாஜக செயலாளர் அனில் ஸரீன், ``ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொலை, கொள்ளை வழக்குகள் மற்றும் குண்டர்களின் நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளன. இதுபோன்ற சம்பவங்களுக்கு முதல்வர் பொறுப்பேற்றுக்கொண்டு ராஜினாமா செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.