மகாராஷ்டிரத்தில் கடந்த 6 மாதங்களில் 557 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமராவதி மண்டலத்திற்குட்பட்ட 5 மாவட்டங்களில் மட்டும் இந்த தற்கொலை நடந்துள்ளது.
அமராவதி மண்டல ஆணையர் வெளியிட்ட தகவலின்படி, அமராவதி, அகோலா, புல்தானா, வாசிம், யேவாட்மல் ஆகிய 5 மாவட்டங்களில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 557 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக அமராவதியில் 170 விவசாயிகளும், யேவாட்மல் மாவட்டத்தில் 150 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
புல்தானாவில் 111, அகோலாவில் 92, வாசிம் மாவட்டத்தில் 34 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
இதில் 53 விவசாயிகளின் குடும்பத்துக்கு அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 284 வழக்குகள் விசாரணையில் உள்ளதால் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக பேசிய அமராவதி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பல்வந்த் வான்கடே, ''
அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலங்களில் மகாராஷ்டிரமும் ஒன்றாக உள்ளது. இதில் அமராவதி அதிக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட மாவட்டமாக உள்ளது.
பயிர்கள் இழப்பு, போதிய மழையின்மை, கடன் சுமை, உரிய நேரத்தில் விவசாயக் கடன் கிடைக்காதது போன்றவை, விவசாயிகள் தற்கொலை வரை செல்லக் காரணங்களாக உள்ளன.
விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உள்ளூர் நிர்வாகிகள் விவசாயிகளுக்கான அரசுத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அதன் மூலம் அவர்களுக்கு வருவாய் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், விவசாயிகளின் குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்கள் குடும்பத்தின் மருத்துவ செலவுக்கு அரசு பக்கபலமாக இருக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது என்பது மிகவும் துயரமான விஷயம். இதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.