போலிச் சான்றிதழ்கள் மூலம் இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணியிடங்களைப் பலரும் பெற்றிருப்பதைத் தக்க சான்றுகளுடன் எக்ஸ் தளத்தில் அம்பலப்படுத்தப்பட்டு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இவ்வாறு தவறான தகவல்களைத் தந்து பதவியில் இருப்பவர்கள் பற்றிய சான்றுகளுடன் எக்ஸ் தளத்தில் ஆயுஷ் சங்கி என்பவர் வெளியிட்டுள்ளார்.
அபிஷேக் சிங்
2010 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான அபிஷேக் சிங், பொதுவாக நடமாடுவதில் குறைபாடு – லோகோமோட்டிவ் டிஸ்எபிலிட்டி – ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் ஆகியுள்ளார். ஆனால், அவருடைய சமூக வலைத்தளக் கணக்குகளிலேயே இந்தப் பிரச்சினை உள்ளவர்களால் செய்ய முடியாததையெல்லாம் செய்துகொண்டிருக்கும் படங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஆசிஃப் கே யூசுப்
2020 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான ஆசிஃப் கே யூசுப், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான (ஈடபிள்யூஎஸ்) இடஒதுக்கீட்டில், போலிச் சான்றிதழ் அளித்து ஐஏஎஸ் ஆகியுள்ளார். இவர் சமர்பித்த ஓபிசி என்சிஎல்(OBC NCL) சான்றிதழ் போலியானது என்று விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரியன்ஹு காதி
2021 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பிரியன்ஹு காதி, எலும்பியல் குறைபாடு - ஆர்த்தோ ஹேண்டிகேப் - ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். ஆனால், அவரை நேரில் கண்டுள்ள பலரும் பிரியன்ஹுவுக்கு எவ்வித குறைபாடுகளும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். அவரது சமூக ஊடக பதிவுகள் மூலமும் குறைபாடுகள் இல்லாதது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அனு பெனிவால்
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான (ஈடபிள்யூஎஸ்) இடஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியின் மகள் அனு பெனிவால். இவரும், 2021ஆம் ஆண்டில் ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியின் மகள், ஈடபிள்யூஎஸ் இடஒதுக்கீட்டில் தேர்வானது முரணாக உள்ளது.
நிகிதா கண்டேல்வால்
2014 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான நிகிதா கண்டேல்வால், பார்வை குறைபாடு ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளார். ஆனால், கண்ணாடி அணியாமல் அவர் ஓட்டுநர் உரிம தேர்வில் பங்கேற்ற விடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தப் பதிவில் தொடர்ந்து தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரத்தில் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேட்கர் நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள சர்ச்சையையும் தொடர்ந்து புதிது புதிதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.