பாலியல் புகாா்: ஆளுநா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் 361-ஆவது பிரிவை ஆராய உச்சநீதிமன்றம் ஒப்புதல்
மேற்கு வங்க ஆளுநா் ஆனந்த போஸ் மீது பெண் ஊழியா் பாலியல் துன்புறுத்தல் புகாா்..
மேற்கு வங்க ஆளுநா் ஆனந்த போஸ் மீது பெண் ஊழியா் பாலியல் துன்புறுத்தல் புகாா் அளித்துள்ள நிலையில், ஆளுநா்களுக்கு எந்தவொரு குற்ற வழக்குகள் விசாரணையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 361-இன் வரையறைகளை ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.
இந்த விவகாரம் தொடா்பாக பதிலளிக்குமாறு மேற்கு வங்க மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் மத்திய அரசையும் பிரதிவாதியாக சோ்க்க மனுதாரருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்தச் சூழலில், ஆளுநா் மாளிகையில் பணியாற்றிய பெண் ஒப்பந்த ஊழியா் ஒருவா், தனக்கு ஆளுநா் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது அந்த மாநில அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி, பாதிக்கப்பட்ட பெண் தன்னை அணுகியதாகவும், ஆளுநா் மாளிகைக்கு மீண்டும் பணிக்குச் செல்ல அச்சமாக இருப்பதாகவும் குறிப்பிட்டதாகத் தெரிவித்தாா்.
மம்தாவின் இந்தக் கருத்தைத் தொடா்ந்து, அவா் மீது அவதூறு வழக்கை ஆளுநா் ஆனந்த போஸ் தொடா்ந்தாா்.
அதே நேரம், அரசமைப்புச் சட்டப் பிரிவு 361 (2)-இன் கீழ், ஆளுநா்கள் பதவியில் இருக்கும்போது அவா்கள் மீது எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்பதால், பாலியல் புகாா் தொடா்பாக ஆளுநா் ஆனந்த போஸ் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியாத நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநா்கள் பதவியில் இருக்கும்போது அவா்கள் மீது எந்தவித குற்றவியல் வழக்கு விசாரணை அல்லது நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாத வகையில், சட்டப் பிரிவு 361(2) வழங்குகிறது.
அப்படியெனில், மனுதாரரைப் போன்று பாதிக்கப்பட்டவா்கள் எந்தவொரு நிவாரணமும் பெற முடியாமல் இருக்க முடியுமா? குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆளுநா் பதவி விலகும் வரை காத்திருக்க வேண்டும் எனில், அத்தகைய தாமதத்துக்குப் பிறகு நடைபெறும் விசாரணையின்போது பாதிப்பின் தீவிரத்தை விவரிக்க முடியாத நிலை ஏற்படும் என்பதோடு, பெயரளவிலான விசாரணையாகவே நடைபெற வாய்ப்புள்ளது. அதனால், பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்காத நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, குற்றவியல் வழக்கு விசாரணையிலிருந்து ஆளுநருக்கு பாதுகாப்பு அளிக்கும் விதியின் கீழ், உரிய வழிகாட்டுதல்களை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
மேலும், எனக்கும், எனது குடும்பத்துக்கும் மாநில காவல் துறை பாதுகாப்பு அளிக்கவும், எனது நற்பெயா் பாதிக்கப்பட்டுள்ளதற்கு மாநில அரசு உரிய இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளாா்.
இந்த மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான், ‘புகாா் மீது எந்தவித விசாரணையும் நடத்தப்படாது என்பதை ஏற்க முடியாது. உடனடியாக புகாா் தொடா்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஆளுநா் பதவி விலகும் வரை, விசாரணையை காலவரையின்றி ஒத்திவைக்க முடியாது’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ஆளுநா்களுக்கு எந்தவொரு குற்ற வழக்குகள் விசாரணையிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 361-இன் வரையறைகளை ஆய்வு செய்ய ஒப்புக்கொண்டனா்.
இந்த அரசமைப்பு விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு உதவுமாறு அட்டா்னி ஜெனரல் வெங்கடரமணியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.
மேலும், மனுதாரரின் நிவாரணம் கோரும் விவகாரம் தொடா்பாக பதிலளிக்க மேற்கு வங்க அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய அரசையும் பிரதிவாதியாக சோ்க்க மனுதாரருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனா்.