முகப்பு
இந்தியா

ஊழலை எதிர்த்து பாஜகவினர் ஆக. 3 முதல் நடைபயணம்

மாநில அரசின் ஊழல் நிர்வாகத்தைக் கண்டித்து பாஜகவினர் ஆக. 3 முதல் ஒரு வாரம் நடைபயணம்

Updated On : 28 ஜூலை, 2024 at 10:33 PM
- படம் | கர்நாடக பாஜக எக்ஸ் தளப் பதிவு
பகிர்:

மாநில அரசின் ஊழல் முறைகேடுகளைக் கண்டித்து, கர்நாடகத்தில் பாஜக சார்பில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜகவும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து இந்த நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளனர். ஆகஸ்ட் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெறும் 7 நாள் நடைபயணம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடையும்.

இவ்விரு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று(ஜூலை 28) பெங்களூரில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமாக அம்மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் நிலவும் ஊழல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, கர்நாடகத்தில் பழங்குடியினர் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் முறைகேடு நிகழ்ந்துள்ளதாகவும், பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் ரூ. 187 கோடி தொகை காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும், இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நடைபயணத்தில் அம்மாநில முன்னாள் முதல்வர்கள் பி.எஸ். எடியூரப்பாவும், ஹெச். டி. குமாரசாமியும் பங்கேற்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைபயணத்துக்கு மாநில அரசு அனுமதி மறுத்தாலும் அதை மீறி நடத்தப்படும் என்று தெரிவித்துள்ள அவர், கடைசி நாளன்று நடைபயணத்தில் பாஜக தேசியத் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.