முகப்பு
இந்தியா

தில்லி: ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் விரிவான விசாரணைக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு!

ஐஏஎஸ் பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழப்பு: விசாரணைக் குழு அமைத்து உள்துறை அமைச்சகம் உத்தரவு...

Updated On : 29 ஜூலை, 2024 at 5:43 PM
பகிர்:

புதுதில்லியில் சனிக்கிழமை(ஜூலை 27) பெய்த கனமழையால் கரோல் பாக் பழைய ராஜிந்தா் நகா் பகுதியில் உள்ள ஐஏஎஸ் தோ்வுக்கான தனியார் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் மழைநீர் தேங்கியது.

பயிற்சி மையம் அமைந்துள்ள சாலையில் பாய்ந்தோடிய மழை வெள்ளம் பயிற்சி மையத்தின் அடித்தளத்திற்கும் பாய்ந்தோடியுள்ளது. தரை மட்டத்திலிருந்து சுமார் 8 அடி தாழ்வாக அந்த பயிற்சி மைய நூலகம் அமைந்துள்ளதே மழை நீர் அங்கு அணை போல சூழ காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வெள்ளம் புகுந்ததில் உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஸ்ரேயா யாதவ் (25), தெலுங்கானா மாநிலம் செகந்திரபாத்தை சோ்ந்த தன்யா சோனி (25), கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த நவின் டால்வின் (28) ஆகியோா் உயிரிழந்தனர்.

பயிற்சி மைய வளாகத்தில் வடிகால்நீர் செல்ல உரிய அமைப்புகள் கட்டமைக்கப்படாததும், பாதுகாப்பு வசதிகள் இல்லாததுமே மாணவர்கள் மரணத்துக்கான முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.உயிரிழந்த மாணவர்களின் மரணத்துக்கு நீதி கோரி கரோல் பாக்கில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மைய மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த குழு அமைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த விசாரணைக் குழு ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மைய விபத்துக்கான காரணங்கள் என்ன? என்பதை விசாரித்து, இதுபோன்ற விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பரிசீலனைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலர் செயல்படுவார் என்றும், மத்திய உள்துறை அமைச்சக கூடுதல் செயலர், தில்லி உள்துறை அமைச்சக முதன்மைச் செயலர், தில்லி காவல்துறை, தீயணைப்புத்துறை உயரதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ஒரு மாதத்துக்குள் அதன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி மையத்தில் 3 தேர்வர்கள் உயிரிழந்த விவகாரத்தில், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் இன்று(ஜூலை 29) உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →